Welcome To Literary Bookshelf
Sangam literature comprises some of the oldest extant Tamil literature, and deals with love, traditions, war, governance, trade and life.!

சிவப்பிரகாச சுவாமிகள் அருளிய
வேதாந்த சூடாமணி

vEtAnta cUTAmaNi of
civappirakAca cuvAmikaL
In tamil script, unicode/utf-8 format




    Acknowledgements:
    Our Sincere thanks go to Mr. Subramanian Ganesh and Shaivam.org
    for offering the etext of this work for inclusion in the Project Madurai collections.
    Etext preparation and proof-reading: volunteers of Shaivam.org
    Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

    © Project Madurai, 1998-2011.
    to preparation
    of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
    are
    http://www.projectmadurai.org/

சிவப்பிரகாச சுவாமிகள் அருளிய
வேதாந்த சூடாமணி


பாயிரம்
தநுணமா துமைமுகத் தாம ரைக்கெழு
மநுணனா மெனவுதித் தடியர் பாற்புரி
கருணைமா மதமெனக் காட்டு மாமுகன்
சரணவா ரிசமலர் தலையிற் கொள்ளுவாம்.
1

சிறப்புப் பாயிரம்
அருமறையின் பொருடெரித்த விவேகசிந்தா
      மணியதனு ளறைவே தாந்தப்
பொருளினைமுந் நீர்வரைப்பி னுலகறியச்
      செந்தமி ழற் புனைதல் செய்தான்
பெருகுசுவை நறவொழுகு செஞ்சொன்மல
      ராற்புனைபாப் பெருந்தண் மாலைக்
கருமிடற்று வானவற்கே சாத்துசிவப்
      பிரகாசன் கவிஞர் வேந்தே.
2
வேறு

சீர்கொண்ட ளருமறையின் முடிமணியைத் தெய்வ
      சிகாமணியை யடியவர்தங் கண்மணியை மாயைப்
பேர்கொண்ட விருளிரிக்குந் தினமணியை முக்கட்
      பெருமணியை யகத்தினுக்கோர் விளக்காக விருத்தி
யேர்கொண்ட விவேகசிந்தா மணியெனுநூ லதனு
      ளெடுத்தியம்பும் வேதாந்தப் பரிச்சேதப் பொருளை
நேர்கொண்ட தமிழ்விருத்த யாப்பதனாற் றெரிய
      நிகழ்த்துவன்வே தாந்தசூடா மணியென் றன்றே.
3
- பாயிரம் முற்றிற்று -

நூல்
வேதமொரு நான்குமா றங்கமுநன் னியாய
      மீமாஞ்சை யொடுமிருதி புராணமுமீ ரேழா
வோதலுறும் வித்தைகளா மவற்றுண்மீ மாஞ்சை
      யுயர்ந்ததா யைந்நான்கத் தியாயமா யருத்த
பேதமுற விருகூறா மவற்றுண்முதற் கூறே
      பிறங்குமருட் சைமினிசூத் திரரூப மாகிப்
போதுமீரா றத்தியா யங்களாய்க் கருமப்
      பொருளுணர்த்திப் பூருவமீ மாஞ்சையெனப் படுமால்.
1

சாற்றியவச் சைமினிசூத் திரத்திற்கு மிக்க
      சாபரமென் றொருபா டியம்புரியப் பட்ட
தேற்றமிகு மம்மீமாஞ் சைக்குமதம் பாட்ட
      மெனவொன்று பட்டாசா ரியனால்வந் தன்று
போற்றுமவன் சீடனா கியபிரபா கரனாற்
      புகழ்பிரபா கரமெனவோர் மதாந்தரநன் கமைய
வாற்றியவச் சாபரபா டியமதற்கு விளங்க
      வாக்கப்பட் டுலகமெலா மறிந்திடநின் றதுவே.
2

உரைத்தவிரண் டாங்கூறு பிரமமுரைப் பதனா
      லுத்தரமீ மாஞ்சையெனப் பட்டருள்கூர் வியாதன்
றெரித்தசூத் திரவடிவ மாகியிரு நான்கத்
      தியாயமா மவற்றுண்முத னான்கத்தி யாயம்
விரித்தலுறு தேவதா காண்டமெனப் பட்டு
      விளங்குறுதெய் வதவிலக்க ணம்பலபத் திரனா
னிரைத்துரைசெய் யப்படுமே னான்கத்தி யாய
      நிகழ்பிரம காண்டமென வேநிகழ்த்தப் படுமால்.
3

அப்பிரம காண்டத்துட் சிவமொடுயி ரயிக்க
      மறைதலாற் சங்கரா சாரியனாங் குருவா
லொப்பரிய பாடியமொன் றுரைக்கப்பட் டதுபின்
      னுரைத்ததற்கு விவரணா சாரியனென் பவனாற்
செப்பரிய விவரணமாக் குறப்பட்ட ததுவே
      தெரியின்வே தாந்தநூ லென்றுரைக்கப் படுமா
லிப்பெரிய வேதாந்த நூற்பொருளி னகல
      மெங்ஙனமென் றிடினுரைத்து மியம்பியநூன் முறையே.
4

வாய்த்தநூன் முகத்துரைக்கு மங்களா சரணை
      வாழ்த்துவணக் கொடுவத்து நிர்த்தேச மெனமூன்
றாத்தபதம் பதப்பொருளே வாக்கியயோ சனையே
      யறிவினா விடையிவை யைந்துரையினிலக் கணமாங்
கோத்துரைசெய் விசேடவிசே டியங்கருத்தா கருமங்
      கொள்கிரியை யிவையந்து வயவிலக் கணமாஞ்
சாற்றுமனு பந்தசதுட் டயநூற்கு விடயஞ்
      சம்பந்தம் பயனதிகா ரிகளெனநான் கறியே.
5

விடயமது சிவசீவர் தமதேகத் துவமாம்
      விமலனொடு நூற்கறையப் படலறையுந் தன்மை
யடைதலுறு சம்பந்தம் பயன்றுயரெ லாநீத்
      தானந்தப் பதம்பெறுதல் சாதனநான் கினையு
முடையவனே யதிகாரி யென்றறைவ ரறிஞ
      ருரைத்தசா தனசதுட் டயநித்த வநித்தப்
படுபொருளின் விவேகமிக பரபோக விராகம்
      பழிப்பரிய சமைமுமூட் சுத்வமெனப் படுமால்.
6

நித்தியமான் மாவேபொய் விடயமெலா மெனத்தேர்
      நிலைதருநித் தியாநித் தியவத்து விவேக
மெத்திவரு மிகமுடனுத் தரத்தில்வரு போக
      விராகமிம்மை மறுமையுள விடயநுகர் வனைத்தும்
பொய்த்தழியு மிடும்பைமய மெனவிடுத லாகும்
      புகழ்சமையே முதலாய சட்குணங்கள் பெறுதல்
வைத்தசமை யியல்பாய முத்திவிருப் பதுவே
      வயங்குமுமூட் சுத்துவமென் றறிந்திடுக மதித்தே.
7

சமைதமையே திதீககையுப ரதிசிரத்தை சமாதி
      சமைமுதலா மறுகுணங்க ளுட்கரண மடக்கல்
சமைதமைதான் புறக்கரண மடக்குதல்கா மாதி
      தணித்திடுகை திதீக்கைகரு மங்களனைத் தினையுஞ்
சுமையெனவே விடுதலுப ரதிசுருதி குருவைத்
      துணிவினா னம்புமதே சிரத்தைகுரு மொழிநெஞ்
சமைவுறவே திட்பமுறல் சமாதியிச்சா தனஞ்சே
      ரதிகாரி செயுங்குருசே வையினையெடுத் தியம்பில்.
8

ஆத்தமுட னங்கமே தானஞ்சற் பாவ
      மாமவற்றுட் குருபரனுக் கனுகூல விருத்தி
யாத்தமுயர் கருபரன்குற் றேவலே யங்க
      மருட்குரவர்க் குரியமனை நிலமுதலா மவற்றைக்
காத்தலது தானமாஞ் சற்குருவே மெய்யாக்
      கண்டசிவ மெனநம்பு மதுவேசற் பாவ
மேத்துகரு மம்பத்தி மிகுஞான காண்ட
      மெனுமிவற்றான் மூவதிகா ரிகள்வேறு முளரால்.
9

உடம்பினையும் வருகுடும்பந் தனையுமியா னெனதென்
      றுளன்கரும காண்டியெலாக் கிரியையுமீ சற்கே
திடம்பெறநின் றாக்குமவ னேபத்தி காண்டி
      செயுங்கரும மனைத்தினுக்குங் கரிதானென் றிருப்போன்
மடந்தவிரு நன்ஞான காண்டியென லாகு
      மற்றுமுள ரைவரொரு வர்க்கொருவ ருயர்வா
யடைந்தவதி காரிகளங் கவர்கருமி முமுட்சோ
      டறையுமப் பியாசியநு பவியுடனா ரூடன்.
10

மூடமொடு தன்சாதி கருமமே பற்றி
      முத்தனா மவனூறு பிறப்பினிலொண் கருமி
நீடுலக மின்மையென நினைந்துபுறக் கரும
      நிட்டனாய் முப்பிறப்பின் முத்தனா மவனே
நாடரிய முமூட்சுலகங் கனவெனங்கண் டுள்ள
      நற்கருமஞ் சேர்ந்துபிறப் பிரண்டுளனப் பியாசி
வீடுலக விவகார நினையாமல் விவேக
      மேவியோர் பிறப்பினான் முத்தனனு பவியே.
11

உலகநிலை தோன்றாமற் றன்றிகழ்ஞா னத்தா
      லுண்மைமுத்த னாமவனே யாரூடன் மற்று
முலகமுதல் யாதெனத்தேர் வொடுகுருவை யடைந்து
      முடம்பாதி பொய்யெனக்கண் டருட்குருவை யடைந்து
முலகிலொரு குரவன்றன் மகற்குபதே சஞ்செய்
      துறக்கேட்டு முயர்தருஞ னிகளாகி முத்தி
யுலகுதொழு விவேகமொடு விரத்திதெய்வ கதியா
      லுற்றிடுவோர் மூவரதி காரிகளா குவரால்.
12

சாதகர்க ளாஞ்சீடர் பேதத்தாற் குரவர்
      தாமும்போ தககுருவே முதலாக விருநாற்
பேதமடை குவரவருட் போதகன்முன் னூலிற்
      பெரும்பொருள்கூ றிடுபவன்றத் துவந்திகழ்த்து பவனே
வேதகனல் வசியாதி யாலிம்மை யின்பம்
      வெந்துயரங் குதவுமவ னிசிதகுரு வறத்தைப்
போதகஞ்செய் திருமையினு மின்பமருள் பவனே
      புகழ்தருகா மியகுருவென் றறைகுவர்மூ தறிஞர்.
13

சூசகனாம் விவேகத்தாற் சமைமுதலாங் குணங்க
      டொகுப்பவன்பொய் விடயமெனவான்மவிருப் பருள்வோன்
வாசகனாஞ் சிவசீவ ரயிக்கியஞங னத்தை
      வழங்குமவன் காரகனை யந்தவிர்த்து நிலைத்த
வாசகலு முத்தியரு¢பவன்விகித குருவா
      மதிகா ரிகளாகு மெனமுன்னர்க் கூறு
நேசமுறு சீடர்தம்மு ளொருவன்முத் தாப
      நெருப்பினால் வெந்துசிந்தா குலமுடைய னாகி.
14

நானாரிப் பவமெனக்கு வந்தவா றென்கொ
      னசிப்பதெவ ராலெனவாய்ந் தலர்கரங்கொண் டேகி
யானாநற் கல்வியறி வடக்கம்வை ராக
      மாதியாங் குணமுடைச்சற் குருவையடைந் தெதிர்மண்
ணூனாரப் பணிந்தெழுந்தன் பாற்கரங்கள் குவித்தே
      யுறவழுத்தி யருட்குருவே யென்பாசத் தொழிவு
தானாமெத் திறத்தினா லெனவினவல் சீடன்
      றனதுவிதி வத்துபசன் னத்துவமா மன்றே.
15

அனையவன ததிகாரந் தெரிந்தருளா னோக்கி
      யஞ்சலோம் பென்றபய கரஞ்சிரத்தி லிருத்திப்
புனையவருஞ் சுருதியுத்தி யாலவன தனான்ம
      புத்தியினை யொழித்துத்தா தான்மியவாக் கியத்தா
னினையலரு மொருபிரம நீயேயென் றுள்ள
      நிலையையுணர்த் துதல்குரவ னுபதேச மாகு
மினையவுப தேசமுறை யுத்தேசத் துடனே
      யிலக்கணஞ்சோ தனையெனுமூன் றினையுமுடைத்தாமால்.
16

அறியவுணர்த் துறுபொருளை நாமமாத் திரத்தா
      லறைந்திடுத லுத்தேச மாங்களகம் பளமாங்
குறியுடைய தானெனல்போ லப்பொருளிற் சிறந்த
      குறியுரைத்த லிலக்கணமவ் விலக்கியமாம் பொருளிற்
செறிவுறுமவ் விலக்கணமுண் டோவிலையோ வென்னத்
      தெரிந்திடுதல் பரிட்சையோர் பொருளறிந்து பெறற்குப்
பொறியுறல்செய் காட்சியா மளவைமுத லாகப்
      பொருந்துபிர மாணங்க ளெட்டுளவா மன்றே.
17

கடமுதலா மவற்றினது காண்கை தானே
      காட்சிபுகை யாலங்கி ஞானமனு மானந்
திடமருவு மவ்வனுமா னம்பதிஞை யேது
      திட்டாந்த மெனுமங்க முடைத்தவற்றுட் பதிஞை
யிடமலைவெவ் வழலுடைத்தென் பதுபுகையுண் மையினா
      லெனலேது மடைப்பளிபோ லென்பதுதிட் டாந்த
முடைமையுண ராத்தனுரை யானதிதீ ராதி
      யுறுகனியா திகளுண்மை ஞானமா கமமாம்.
18

பகற்பொழுதுண் ணானொருவ னிளையாமை கண்டு
      பரிந்திரவூண் கற்பித்தல் காணருத்தா பத்தி
யகத்தினிலை யுறுதேவ தத்தனெனி லிருப்ப
      னவன்வேறோ ரிடத்திலெனத் தெரிந்திடுத றன்னைத்
தகப்பெரியர் கேள்வியருத் தாபத்தி யென்பர்
      தகும்பசுவோ டொக்குமரை யெனுமொழிகேட் டிருந்தோன்
புகப்படரும் வனத்திலதன் விடயஞா னந்தான்
      பொருந்துதலே யுவமானப் பிரமாண மாகும்.
19

இந்நிலனிற் கடமில்லை யென்பதனாற் றோன்று
      மின்மையுணர் வபாவமா மாயிரமா கியவெண்
டன்னிலொரு நூறெனுமெண் ணுண்டெனுஞா னந்தான்
      சம்பவமா மிம்மரத்தி னியக்கனுள னென்னுஞ்
சொன்னிகழ்வில் வருமியக்க விடயவுணர் வதனைச்
      சொற்றிடுவ ரறிஞரை திகமாகு மளவை
யென்னவிவண் டொகுத்துரைத்த காட்சிமுத லாய
      வெண்வகையிற் சமயர்கொள லின்னவென வுரைப்பாம்.
20

புகலுலகா யுதனுக்குக் காட்சியொன் றேசைன
      புத்தவைசே டியர்கடமக் கிரண்டனுமா னத்தோ
டுகலருஞ்சாங் கியர்க்குமூன் றுரையொடுநான் குவமை
      யொடுநியாயர்க் கருத்தா பத்தியொடைந் தாகு
மிகுபிரபா கரற்காறா மபாவமொடு பாட்ட
      வேதாந்தி கட்காகு மெனவறிக தெறிவுற்
றிகலருமொண் புராணிகர்க டமக்களவை யெட்டா
      மென்றுரைப்பர் சம்பவவை திகங்களுட னன்றே.
21

திருந்தியவே தாந்தநூ லியம்புறுவ திருக்குத்
      திரிசயமென் றிருபொருளங் கவற்றின்முதற் றிருக்கில்
வரைந்திடுவ சுவகதந்தன் சாதிவிசா திகளா
      மற்றவைமூன் றினுக்குமுதா ரணமுறையே மொழியில்
விரிந்தநிழ றருநெடும்பூம் பணைமரமொன் றிற்கு
      ஞிமிறினங்கள் புக்குமுகத் துழுதுபெரு குறுதே
னருந்துநறு மலர்முதலா யினவும்வே றுள்ள
      வணிமரமுங் கன்முதலா யினவும்போ லாமால்.
22

நிரவயவ மாதலினா னுஞ்சத்து வேறு
      நிகழாமை யானுமிறை தனக்குமுத னடுவின்
றொருவுறுக விவ்வுலக காரணமா மாயை
      யுண்மையினா னிறுதியதி லென்பதென்கொ லென்னில்
வரைவுதரு சித்தரிகன் சித்திரசத் தியைப்போன்
      மாயையுஞ்சன் மாத்திரமாம் பிரமத்தின் வேறாய்த
தெரிவதிலா மையினென்றுஞ் சச்சிதா னந்த
      சிவத்தினுக்கு விசாதியிலை யென்றுணர்க தெரிந்தே.
23

சுருதியினு ளேகமே வாத்துவித மென்னுஞ்
      சொற்கிடையு ளேகமெனுஞ் சொல்லதனுக் கயிகக
மரிதிலுண ரேவவெனு மிடைச்சொற்குத் தேற்ற
      மத்துவித மெனுமொழிக்குத் துவிதவிலக் காகக்
கருதுபொருள் வருதலினா லிம்முறையே மாயா
      கற்பனைகள் கடந்துநிர வயமாகி யென்றுந்
திரிதலில்சின் மயமாகு மொருபிரமந் தனக்குத்
      தெரித்தசுவ கதமுதலா யினமூன்று மிலையே.
24

அத்தியா ரோபமப வாதமென விரண்டா
      யறைகுவர்கற் பிதமத்தி யாரோப முள்ள
சுத்தியூ டிலாதவிர சதம்விளைத்தல் போலச்
      சொல்பிரம சத்தினில்லா வுலகதுகற் பித்த
லெய்த்திதுதான் வெள்ளியதன் றிப்பியெனல் போலோர்ந்
      திறைமெய்பொய் யுலகமெனத் தௌ¤தலப வாத
மெய்த்தபொரு ளறியுமிலக் கணமூன்றா மவைதாம்
      விளங்கதத்து வாவிருத்தி தடத்தமொடு சொரூபம்.
25

ஆகமுத லனநியதி செய்து நின்ற
      வாருயிரை யறிவித்த லதத்துவா விருத்தி
சாகைநுனி மதியுளதென் றுணர்த்தலிற்பூ தாதி
      சகமாய காரணங்கொண் டறிவுணர்த்தல் தடத்த
மாகனலி விளங்குகதிர்ச் சொருபனெனல் போலான்
      மாவினிச சொருபமிது வெனவுணர்த்தல் சொருப
நீகடவு சொருபநிசஞ் சச்சிதா னந்த
      நித்தியம்பூ ரணமாக நீநினைந்து கொள்ளே.
26

மதித்தன்மதி யாமைநன வாதிகளிற் றனக்கோர்
      வாதையிலா துண்டெனல்சத் தவத்தையனைத் தினுமே
யுதித்தவிட யங்களைநின் றறிந்திடுதல் சித்தா
      முவப்பினுக்கு விடயமாந் தன்மையா னந்தந்
திதித்தசதோ திதநித்த மனைத்துஞ்சா தகமாந்
      திறத்தினா லனைத்தினுஞ்சம் பந்தநிறை வெனவே
விதித்திடுக வுயிர்சச்சி தானந்த மயமேல்
      விளங்கியதி லவற்றுளா னந்தமெங்கு மெனினே.
27

வெம்மையொளி யுருவாய வழல்விளக்கி னொளியே
      விளங்கியிடும் புனலிடத்தின் வெம்மையே விரியும்
வெம்மையொளி யிரண்டுமெழும் விறகினிலவ் வகைபோல்
      விமலசத்தொன் றேதிகழுங் கன்முதலா மவற்றின்
மெய்ம்மைதவிர் புத்தியது தமோகுணத்தின் மூட
      விருத்தியினு மிராசதத்தின் கோரவிருத் தியினு
மெய்ம்மையசச்சித்தாகுஞ் சத்துவத்திற் சாந்த
      விருத்தியினிற் சச்சிதா னந்தங்க டோன்றும்.
28

ஆதலினா லானந்த மயமாமான் மாவவ்
      வைந்தினுக்கு முபாதியுள வவைமுறையே மொழியிற்
பேதமுறுஞ் சத்துமூன் றாம்விவகா ரிகம்பின்
      பிராதிபா திகம்பார மார்த்திகசத் தெனவே
மூதுணர்விற் சுழுத்தியிற்றோண் றாதுநன வுற்று
      முத்தியுறு மளவுமுறுங் கடாதிமுத லதுவாம்
போதுகன வினிற்றோன்றி யழிவதிடை யதுவாம்
      பொன்றாத பிரமசத்தே யிதியதா மன்றே.
29

சீவனொ டீசன்கூ டத்தன்பி ரமமென்னச்
      சித்துநான் காங்குடநீர் கதுவுறுவெண் மீன்வான்
றூவுபனி நீர்விம்ப வனுமிதா காசஞ்
      சொல்கடா வச்சினா காசமொடு மாவான்
மேவுமிவை யவற்றினுக்குத் திட்டாந்த முறையாம்
      விடயமொடு பிரமம்வா சனைமுக்கி யம்பின்
னேவுநிச வான்மாவோ டத்துவிதம் வித்தை
      யெனுமிவற்றின் பெயராலெண் வகைப்படுமா னந்தம்.
30

மாதுமுதல் விடயவூ தியங்கடமிற் றோன்றி
      வரல்விடய வானந்தங் கண்படையிற் றோன்ற
லோதுபிர மானந்தந் துயிலொழிவிற் றோற்ற
      முடையதுதான் வாசனா னந்தங்கே டுளவா
மாதலுமி னொதுமன்மதி தோன்றுதல்முக் கியமா
      மானந்த மனோலயயோ கத்தினில்வந் துதித்த
லேதமறு நிசானந்தம் பிரியவிட யத்து
      ளியான்பிரிய னெனத்தோன் றுதலான்மா னந்தம்.
31

விரியுமுல கனைத்தும்பொய் மெய்ம்மைதா னென்னும்
      விவேகத்திற் றோன்றுவதே யத்துவிதா னந்த
மரியமறை முடிவாகும் வாக்கியஞா னத்தா
      லாதலது வித்தியா னந்தமென வறிக
வுரியனமுன் னின்மையொடு பின்னின்மை யின்றி
      யொன்றொன்றா காமையென்று மின்மையென நான்காய்த்
திரியுமபா வங்களிவை நித்தியத்துட் புகாத
      திறத்தனவாம் பூரணத்து முறாதனமூன் றாகும்.
32

உரைத்தவைதா மியாவையெனி னொருகாலத் துண்டின்
      றொருகாலத் தெனுங்கால பரிச்சேத முடனே
தெரித்தவொரு தேயத்துண் டொருதேயத் திலையென்
      றேயபரிச் சேதமுமொன் றாமாகா தென்னுங்
கருத்தில்வரு வத்துபரிச் சேதமுமா மெனவே
      கருதிடுக வினிச்சித்தின் விரிவாகு மெனமுன்
விரித்திடுமச் சீவாதி கட்குநா மாதி
      விவகார கற்பனையீண் டெடுத்துமொழி குதுமால்.
33

சாற்றரிய சீவபே தங்கண்முறை விசுவன்
      றைசதன்பின் பிராஞ்ஞனெனப் பகர்ந்திடுவ ரவருள்
வேற்றுமைசெய் தூலவுடல் வியட்டியபி மானி
      விவகா ரிகன்புத்தி கதுவுறுசை தன்யன்
மாற்றரிய சிதாபாசன் விட்சேப ரூபன்
      வருபிரமாத் துருநுவல்கத் துருவொடுபோத் துருவே
தோற்றியிடும் விஞ்ஞான மயன்குடும்பி சரீரி
      துவம்பதமுக் கியன்முதலா யினவிசுவ னாமம்.
34

பெற்றவொரு சூக்குமமெய் வியட்டியபி மானி
      பிராதிபா திகசீவன் சொற்பனகற் பிதனென்
மற்றவைதான் முதலாய தைசதன்றன் பெயராய்
      வழங்குறுவர் காரணமெய் வியட்டியபி மானி
யுற்றுவரு மவித்தையோ பகிதன்கா ரியமா
      முபாதிகனென் பனமுதலாம் பிராஞ்ஞனா மங்கள்
பற்றியவரு சீவான்மா வந்தரான் மாமேற்
      பரமான்மா வெனப்படுமான் மாவிதமூன் றாகும்.
35

வேறு

காய்ந்துள விரும்பு போலுடம் பாதி
      கலந்துறு குடும்பமென் வழக்கிற்
சார்ந்துளன் சீவான் மாவெனப் படுவான்
      றாமரை யிலையினீர் போலத்
தோய்ந்துள குடும்பப் பெருவிவ காரந்
      தோய்வில னந்தரான் மாவாம்
போந்துல கிறந்து பரிதிபோற் சான்றாய்ப்
      பொருந்தினோன் றான்பர மான்மா.
36

நீர்விழுந் தொருவெங் கதிர்தடு மாறி
      நின்றதென் றுரைப்பது போலுங்
கார்விரைந் தோட வோடுகின் றதுதண்
      கலைமதி யென்பது போலு
மோர்வருந் திரிவிற் போதவான் மாவிற்
      குடன்முத லாகிய வுபாதிப்
பேர்வருஞ் சீவ பாவனை யுலகப்
      பெருவிவ காரமென் றறியே.
37

அருவிராட் புருட னிரணிய கருப்ப
      னந்தரி யாமியென் றீசன்
றிரிவித மவருட் டூலவா கத்துச்
      சமட்டியா கியவபி மானி
விரிவுறும் வைச்வா நரனென முதலாய்
      விராட்புரு டன்பெய ராகு
மருவுறு மிலிங்க மெனுமுடற் சமட்டி
      மானிமாப் பிராணனே யன்றி.
38

சூத்திராத் மிகனென் பெயர்முத லாகச்
      சொற்றன ரிரணிய கருப்பற்
கேத்துகா ரணமா முடம்புறு சமட்டி
      யெனுமபி மானியவ் வியத்தன்
வாய்த்தகா ரணமா முபாதிக னனந்த
      மயன்பர தேவதை பரம
னாத்ததற் பதமுக் கியார்த்தனென் பெயர்மு
      னந்தரி யாமிபெற் றிடுமே.
39

சித்திர படமோர் பொருளொடுங் கூடாத்
     திகழ்வினிற் றெளதமே யெனவு
நெய்த்தகூழ் வருடக் கடிதமே யெனவு
     நீனிறத் திலாஞ்சித மெனவும்
பத்தியோ வியஞ்சேர்ந் திரஞ்சித மெனவும்
     படுதல்போற் பிரமமு மாயை
வைத்தகா ரியங்கள் கடந்துறு நிலையில்
     வையங்குஞ்சித் தெனும்பெயர் புனைந்தே.
40

அகிலகா ரணமா மாயையை மருவி
     யந்தரி யாமியா மாயை
சகலகா ரியமாஞ் சூக்கும வுடம்பு
     சார்ந்துபொற் கர்ப்பனென் றாகி
விகலமி றூல வுடம்பினை மேவி
     விராட்டென நிற்குமென் றறிவாய்
திகழுறு பிரமஞ் சித்திர படமேற்
     சித்திர மியாதென வினவில்.
41

விரிஞ்சனே முதலாஞ் சேதன மோடு
     வெற்பெழு வாயசே தனமாய்ப்
பரந்துள வுலகஞ் சித்திர மென்பர்
     பரம்பொரு ளாமொரு பிரமத்
திருஞ்சடா சடமா முலகது தோற்ற
     மெவ்வண மெனிற்படந் தன்னில்
வரைந்தபன் னிறமாய்க் குளிர்முதன் மாற்ற
     வல்லன வலதுகிற் போலி.
42

ஓர்வடி வாகிக் குளிர்முதன் மாற்று
     முண்மையாஞ் சித்திர படம்போன்
றார்வுற வெழுதுங் கிரிமுத லாய
     வதனொடொப் புறுகிலா வாபோற்
றேர்வரும் பிரமத் தெழுந்துபற் பலவாஞ்
     சீவர்கள் சித்தொடொப் பாகப்
பார்முத லொவ்வாச் சடங்களா தலினாற்
     பரத்திலாஞ் சடாசட வுலகம்.
43

இத்திறத் தீசன் முக்கிய குணங்க
      ளெலாமறி தன்முத லனவாங்
கத்துருத் துவமோ டகத்துருத் துவம்பி
      னன்னிதா கத்துருத் துவமே
யத்தன்மெய்ப் பிரவுத் துவவலி யாக்க
      லளித்தல்போக் குதனிய மனந்தா
னெயத்திட லகற்று மநுப்பிர வேச
      மென்பன வீசனைந் தொழிலே.
44

நீங்கிய விகாரப் பிரமமா மீச
      னிகழ்த்துமோ தொழில்பல வென்னிற்
பூங்கதி ரிச்சை யின்றியே வாரி
      பொழிமழைக் கதிரினாற் பொழியா
வாங்கதி னிழலைப் பொருந்தியந் நிழலை
      யலர்முகி லான்மறைத் தளித்தே
தூங்கிம கரத்தால் வெங்கதி ரானீர் தொலைத்ததைத்
      தன்னொடாக் குதல்போல்.
45

போற்றிறை மாயா சத்தியோ டொன்றிப்
      பொலிந்தசிற் பிரதான மதனாற்
சாற்றரு நிமித்த காரண னாகித்
      தகுஞ்சடப் பிரதான மதனா
லாற்றுபா தான காரண னெனநின்
      றாக்கிய புத்தியா திகளிற்
றோற்றுபூ சீவ ரூபமாய் வினையாற்
      சொற்றபோத் துருவென நின்றே.
46

நியமசக் தியினாற் போகபோத் துருவை
      நியமஞ்செய் துருத்திர வுருவான்
மயமுறு மாயா காரியஞ் சிதைத்து
      வந்தரு ளாரிய வுருவா
லயர்வுறு சீவன் றன்னையே தன்னோ
      டயிக்கமாக் குவனென வறிக
வுயர்வுறு சமட்டி வியட்டியென் பனவா
      லுயிரிறை கட்குறும் பேதம்.
47

மிகுமரப் பன்மை தண்டலை யெனல்போன்
      மிகுமுயி ரெலாமுனா னெனுமோர்
தகுமபி மான மிறைசமட் டியதாந்
      தனித்தனி மரம்பெயர் கொளல்போற்
பகுமுட றோறும் வேறுவே றாகப்
      படுமபி மானமோர்ந் துரைப்பிற்
றொகுமுயிர் வியட்டி யுருவமென் குவர்மேற்
      றொம்பத விலக்கிய முரைப்பாம்.
48

சீவனொன் றிடுமூ வகையதிட் டானன்
      சேதன னந்தரி யாமி
யாவலி னநுசந் தாத்துருச் சுயஞ்சத்
      தார்த்தனோ டவச்சினன் சீவன்
தாவரும் பார மார்த்திகன் றுரியன்
      சான்றினன் பிரத்திகான் மாவா
லேவமி றொம்ப தத்திலக் கியார்த்த
      னென்பகூ டத்தனா மங்கள்.
49

ஈசனொன் றிடுமூ வகையதிட் டான
      னியம்பரு மொருபரப் பிரமம்
பாசமில் பரதத் துவம்பர மான்மாப்
      படியிலா விசுத்தசித் தின்றிப்
பேசுதற் பதலக்கி யார்த்தனெ¢ பனமுற்
      பெறுபரி யாயநா மங்க
டேசுறு பிரமந் தனக்கென வுரைப்பர்
      திருந்துநூ றெரிதரும் புலவர்.
50

வடிவொடு பெயராற் குடமுத லாக
      மண்பல வகைப்படு மதுபோற்
சுடுபசும் பொன்னே செய்கையாற் பலவாஞ்
      சுடரிழை யுருவுகொள் வதுபோற்
படியறு சித்தே முன்சொல்சீ வாதி
      பலவுமா மெனமுத லாக
விடலரு மறிஞர் நூல்பல திருக்கு
      விவேகமென் றியம்புறு மன்றே.
51

இந்துவினை யனாதியடைந் ததைமுழுது
      மறையாம லிந்து தன்னா
லந்திறனை யொளிர்வித்துக் கொள்களங்க
      மெனவெனையா னறியே னென்னு
முந்துலக விவகாரந் தனிலுயிரை
      யடைந்ததனை மூடா தென்று
மந்தவுயி ராலறியப பட்டுமனற்
      றம்பிக்கு மந்தி ரம்போல்.
52

விளங்குறுமான் மாவுருவ மல்லாம
      லான்மாவின் வேறாய்த் தோன்றா
துளங்கொள்விய தாதிகா ரியங்கடமைத்
      தோன்றாம லொடுக்கி நின்றுந்
துளங்கலக டிதகடித னாசமர்த்தை
      யாகியுமே தோன்றா நின்ற
வளங்கடரு காரணமா யதுவாகுந்
      திரியமா மாயா சத்தி.
53

அனையதொரு மாயையிலக் கணமசத்துச்
      சடந்துக்க மநித்தங் கண்ட
மெனுமிவையுண் முயற்கோடு முதலசத்துச்
      சடவுருக்கல் லெழுவாய் புத்தி
தனையடையுங் கோரமொடு மூடவிருத்
      திகடுக்கந் தபுமெய் யாதி
முனமுரைசெய் யநித்தங்கண் டிதங்கால
      பரிச்சேத முதல வாகும்.
54

பின்னமொட சத்துச்சா வயமுமெதிர்
      மறையுமவை பிரிந்து தம்மின்
மன்னியவு மொழிந்தநிர்வாச் சியமாகு
      நவவிதமம் மாயை யெய்து
முன்னலருஞ் சுருதிசம்பத் தமுத்திசம்பந்
      தமுலகசம் பந்த மூன்று
மென்னவரு ஞானங்கண் முறையேயம்
      மாயைபடு மியல்பு கூறில்.
55

விண்ணின்மல ரெனத்துச்ச மேயெனவு
      மிப்பிவரு வெள்ளி போல
வெண்ணுமநிர் வாச்சியமா மெனவுமுயிர்
      போனித்த மெனவு நிற்கு
முண்ணிலவு தமமாயை மோகமுட
      னவித்தைபொய்ம்மை யுருவி யென்றே
நண்ணுமிவை மாயாபஞ் சகமாகு
      மெனவறிஞர் நவில்வ ரன்றே.
56

சீவசே தனமறைத்துத் தமமயலா
      கியவுலகத் திறத்திற் கெல்லா
மேவுகா ரணமாகி மாயைவிப
      ரிதஞானம் விளைத்து மோக
மோவவுணர் வழித்தவித்தை சத்தின்வே
      றாகிப்பொய் யுருவி யாகும்
வீவிலா மாயையதற் கிருதருமஞ்
      சங்கோச விகாச மென்றாம்.
57

விரிந்தபட மோவியங்கள் பலதிகழ்த்திக்
      குவித்தொடுக்கும் விதமே போல
வாந்தைதரு மாயையுந்தன் விகாசதரு
      மத்தினா லகிலங் காட்டிப்
பரந்தவைகள் சங்கோச தருமத்தா
      லடக்குமெனப் பகர்வர் மாயைக்
கிருந்தகுண மிரண்டுளதில் சுதந்தரமுஞ்
      சுதந்தரமு மென்ன வன்றே.
58

பொய்யாகிச் சத்துருவப் பொருளின்வே
      றாகியொரு பொருளாய்த் தோற்றல்
செய்யாமை யாலுளதில் சுதந்தரஞ்சான்
      றாயவொரு சேத னன்பா
லுய்யாத சீவாதி யாக்குதலாற்
      சுதந்தரமு முளது மாயை
மெய்யான தலதென்றல் விசும்பலர்போ
      லில்லையென விளம்ப லன்றே.
59

புலமில்கன விடைக்கரிபோற் றோன்றிவிசா
      ரந்தோன்றப் பொன்றும் பொய்யா
நிலவுதல்செய் சுத்தசத் துவவடிவ
      மாயையொடு நிகழ்த்து கின்ற
மலினசத் துவவடிவ வவித்தைதமப்
      பிரதான வடிவ மாகு
நலமில்பிர கிருதியென விருத்திமூன்
      றுடைத்துமுன நவின்ற மாயை.
60

மாயைவரு சுழுத்திலயங் களினத்தி
      யாசயிக்க மாயிற் றுண்மை
யாயபிர மத்தினன வொடுபடைப்பி
      னிதுபேத வவத்தை யெய்து
மேயவதிற் பிரமசை தன்னியம்விம்
      பித்திதுவே விளங்கு ஞானத்
தூயசை தன்னியவீ சன்பதியென்
      றிடநிற்குந் துணிவு தன்னால்.
61

அப்பரற் குபாதி யாகி யமோககா ரணியா மாயை
பொய்ப்புறு மவித்தை யெண்ணிற் போத்துருப் பசுவென் றோது
மொப்பருஞ் சீவர்க் கெல்லா ழுபாதியாய் மோகஞ் செய்யு
மெய்ப்புறு பகுதி பாச மெனக்குணச் சமமாய் நின்று.
62

அவித்தையின் விம்பித் துள்ள வாருயிர் நுகர்ச்சிக் காகத்
துவக்குறு காரி யங்க டோற்றிட வெதிர்கு றித்த
வுவப்புறு மீச னோக்க மாத்திரத் துற்ற லர்ந்து
பவப்படு கால மாகி யதுகொடு பரிணா மித்து.
63

இருமக தத்து வந்தா னெனநிற்கு மதுதா னீர்பெய்
தரும்விதை முளையா மன்முன் போலிரா தமர்தல் போலக்
கருவெனும் பகுதி யோடாங் காரமு மாகா மற்பொய்
யுரமுறு நிருவி கற்ப வுருநடு வவத்தை யாகும்.
64

கொன்மக தத்து வந்தான் குணபேத முறாப்பொய் ஞான
மன்சவி கற்ப மாக வருமுத லத்தி யாச
மென்முத லாங்கா ரந்தோன் றிடுங்குண சத்து வந்தான்
பின்வரு மிராச தஞ்சொற் பெருந்தமோ குணமென் றாகும்.
65

உரைப்பருஞ் சத்து வாதி யுருவங்கள் பிரகா சம்பின்
புரைப்பிர விருத்தி மோக மென்குவர் புகல்கு ணங்க
ணிரைப்பெயர் தான்வை காரி நிகழுந்தை சதம்பூ தாதி
விரிப்பருங் குணங்கண் மூன்றுந் தருவமேல் விளம்ப லுற்றாம்.
66

சத்துவ குணத்திற் றோன்றுந் தயங்குமுட் கரண நான்கும்
யுத்தியிந் தியங்க ளைந்தும் போந்துதித் திடுமி ராச
தத்தில்வாக் காதி யைந்துந் தகும்பிரா ணாதி யைந்து
மத்தமோ குணத்திற் றோன்று மகல்விசும் பாதி பூதம்.
67

அப்பெரும் பூதம் பஞ்சீ கரித்துல காகி நிற்குஞ்
செப்பிய கரண நான்கின் செயல்களா நினைத்த லந்தப்
பொய்ப்பொரு டுணிதன் மானம் புரிதல்சிந் தித்த றிங்க
டிப்பிய நான்மு கன்சேத் திரிபுராந் தகன்றே வன்றே.
68

இக்கர ணங்க டான மிதயஞா னேந்தி யங்கட்
குய்க்குறுந் தொழிலாங் கேட்ட லுறல்காண்ட லுண்டன் மோத்த
றிக்குமா ருதமே நன்மித் திரனுயர் வருண னோடு
தக்கசு வனியாந் தெய்வந் தானங்கா தாதி யாமே.
69

புத்தியிந் திரியங்க டாமுணரும் விடயம்
      புறமெனவே யுள்ளுமுணர்ந் திடுஞ்செவிகள் புதைப்பி
னுய்த்தபிரா ணாதியொலி கேட்கையன்னா திகளை
      யுண்ணும்போ தழல்குளிர்ச்சி யறிதல்விழி மூடின்
மெத்துமக விருளறித லுட்காரா திகளின்
      விளங்குசுவை கந்தமறிந் திடன்முறையே யாகும்
வைத்தகரு மேந்திரியத் தொழிலுரைத்த னடத்தல்
      வழங்கல்விட லாநந்தித் திடுதலென வறியே.
70

அங்கிமக பதியிரவி யுடன்மிருத்து பிரசா
      பதிதெய்வம் வாய்முதலாங் கோளகை கடான
மிங்கிவையு ளுட்கரண மிருவகையிந் திரிய
      மென்னவரு பதினான்கு மத்தியான் மிகமாந்
தங்குமிவற் றுறுவிடய மாதிபௌ திகமாந்
      தகுமதிதே வதையாதி தெய்வீக மாமிப்
புங்கவரே யிந்திரியம் விராட்புருடற் கதுமெய்
      பொன்கர்ப்பற் கதுமறைப்பா மந்தரியா மிக்கே.
71

நின்றிதயந் தனையடைந்து பிராணனுசு வாச
      நிசுவாச மியற்றுமபா னன்குதத்தி னுற்றுச்
சென்றொழிய மலசலங்க ளொழித்தலுறுஞ் சமானன்
      சேர்ந்துந்தி யன்னரச முறுப்பனைத்தும் பகுக்கு
மென்றுமுதா னன்களமுற் றுற்காரம் புரியு
      மிருந்தங்க மெங்கும்வியா னன்பரிக்கு முடம்பைக்
குன்றுதலி னாகன்சோம் பாவித்தல் விளைக்குங்
      கூர்மனால் விக்கலொடு தேக்குளவா மன்றே.
72

தும்மலுட னிருமல்வருங் கிரிகரனா னகுதல்
      சொல்லுதலாந் தேவதத்த னாற்சோக ராக
மிம்மைதருந் தனஞ்செயனத் தனஞ்செயனாம் வாயு
      விறந்தவைந்து நாள்காறு மிருந்துநனி வீங்கி
மெய்ம்முழுதும் வெடித்திடச்செய் தகலுநா காதி
      விளம்புபுற வாயுக்க டாங்கருமேந் தியங்க
டம்மைமிக வியக்கலுறும் பிராணாதி வாயுத்
      தாமியக்கும் விடாமன்ஞா னேந்திரியங் களையே.
73

சாற்றின்வயி ரம்பன்முக் கியன்பிரபஞ் சன்னந்
      தரியாமி யொடுமகாப் பிராணனெனும் பெயர்கொள்
காற்றிவைகள் சீவசம் பந்தமா யேயுட்
      கரணங்க ளியக்கியிடு மண்முதலைந் திற்கும்
பாற்றிகழும் வியாபாரம் பொறைபிண்டீ கரணம்
      பாகமொடு விரகமிடங் கொடையாகுந் தரும
மாற்றலுறு திண்மைநெகிழ் வழற்சிபரி வெளியா
      மயனொடரி யரனீசன் சதாசிவன்றே வதைகள்.
74

கந்தமுத லாயினவே குணங்களவை தம்முட்
      ககனத்திற் கொலியொன்றே வளிக்கிரண்டு றுடனே
யந்தழலுக் கொளியொடுமூன் றறற்கிரத மொடுநான்
      கைந்துமண மொடுபுவிக்கென் றறிகதிரி புடிதான்
முந்துஞா துருஞான ஞேயமா மவற்றுண்
      மூலவங் காரஞ்சேர் சீவகை தன்னிய
நந்துஞா துருமனத்திற் கதுவறிவு ஞான
      நவின்றபௌ திகவிடய ஞேயமென வறியே.
75

ஈங்குமன மிருபத்து நான்காவ தாகு
      மிருபத்தைந் தாவதுதான் மூலவகங் கார
மாங்கதனை யடைதலுறுஞ் சிதாபாச சீவ
      னறையுமிரு பத்தாறா மவன்மாயை மருவு
மோங்கொளியா மீசனிரு பத்தேழா மவனவ்
      வுயிர்முலாந் துரியனிரு பத்தெட்டா மவனா
னீங்கலரு மீசனதிட் டாத்துருவாம் பிரம
      நிகழ்த்திலிரு பத்தொன்ப தாவதுவா மன்றே.
76

தெரித்தகா ரியத்தோற்ற மிருவகையாங் கிரம
      சிருட்டியுக பற்சிருட்டி யெனமூலப் பகுதி
விரித்தமக தத்வமக முந்தன்மாத் திரையாம்
      விளங்குசத்தப் பிரகிருதி யாற்பஞ்ச பூத
முரைத்தவற்றாற் பிரமாண்ட பிண்டமுத லாய
      வுலகுதயந் தான்சிரம சிருட்டிநிறை கடலான்
மருத்துவசத் தலையாதி போற்சிவத்தின் மாயா
      மயநாம வுருவநிகழ வாமுகபற் சிருட்டி.
77

சுருதிசித்த மாதலினா லிவையுடம்பா டாகுந்
      தூயபரப் பிரமமாம் விகாரமிலா விறையாற்
றருதலெங்ஙன் காரியங்கள் சடப்பகுதி யென்னிற்
      றாளிலாக் கதிர்ச்சிலையி லிச்சையிலா தெழுந்த
பருதியினா லழல்வரல்போற் பரசிவனான் மூலப்
      பகுதியிடை மகதாதி காரியங்கள் வரற்குக்
கருதின்முர ணிலையாகு மெனப்புகல்வ ரறிஞர்
      காரியங்க டோற்றுதனால் வகையவையீன் டுரைப்பாம்.
78

விருத்திபரி ணாமமா ரம்பம்விவர்த் தகமாம்
      விரிந்தபடங் குடில்பாவம் பாறயிரா கார
முரைத்தலுறு தந்துபட நியாயம்வன் பழுதை
      யுரகவுரு முறையவற்றின் றிட்டாந்த மாகும்
வருத்துகயிற் றரவங்கந் தருவநகர் குற்றி
      மகன்கனவிந் திரசாலஞ் சுத்திகா ரசதந்
தெரித்தவிவை முதலனவாந் திரிதலின்மெய்ப் பொருளிற்
      றிரிந்திடுபொய்ப் பொருளதுகற் பிதமாதற் குவமை.
79

பொய்ப்பொருள்கற் பிதமாயிற் றவிகாரி யாகப்
      பொருந்துமுயி ரிடத்தேன்முன்பிராந்தியார்க்கென்னி
லொப்பில்சதி பதிரதிமா லுருவச்சொற் பனந்தா
      னொருமுனிவன் பாலுதிப்பி னதனாலங் கவனுக்
கெப்பழுது மிலாததுபோற் சான்றாமான் மாவில்
      இலங்குகுண வுருவமாம் பகுதியினான் மருளு
மெய்ப்பரிய ஞாதுருவும் பிராந்திஞா னமும்பொய்
      விடயஞே யமும்வரினு மவர்க்கிடையூ றிலையே.
80

இறைவனாற் றோன்றியமா யாமயமா முலக
      மிருந்தபடி யிருக்குந்தன் வடிவினா லதனுண்
மறைவிலாச் சீவபுத்தி விருத்திகற் பிதமா
      மற்றொருபோக் கியவடிவ மேவிருப்பு விடயம்
வெறுவிதாம் வெறுப்புவிட யத்தினொடு நொதுமல்
      விடயமெனப் பலவிதமா மலையாவை யென்னின்
முறையின்வநி தாதிபுலி யெழுவாய்வீழ் துரும்பு
      முதலனவா மெனமொழிவர் முற்றுமுணர்ந் துடையோர்.
81

ஈசனிரு மிதமான வேகாகா ரமும்பின்
      னெய்துமுயிர்க் கற்பிதமாம் பலவாகா ரமுமோர்
தேசவிட யத்துறுதற் கெவ்வாறிங் கென்னிற்
      றிட்டாந்த மீசனிரு மிதமணியா திகடாம்
பேசிலொரு தகையாய்ப்போத் துருப்புத்தி தன்கற்
      பிதநானா விதத்தினா லவைதமைபெற் றோனுக்
காசைவிட யமதாகிப் பெறாற்குவெறுப் பாகி
      யரியதுற விக்குபேட் சாவிடய மாமே.
82

அப்பொரு டான்விளங்கித் தோன்றுறுதற் கின்னு
      மறைதுபொரு திட்டாந்தந் தோன்றியவோர் மாது
மெய்ப்பரிசோர் திறமாகப் போத்துருக்கள் புத்தி
      விருத்திகற் பிதத்தினாற் றாதைக்கு மகளாய்த்
தப்பில்கொழு நற்குக்கா தலியாகி மகற்குத்
      தாயாகி மாதுலற்கு மருகியா யிருப்ப
ளிப்பரிசு விடயமெலா மிறைவனிரு மிதமு
      மிலங்குயிர்க்கத் பிரமுமா மிருதிறத்துற் றிடுமே.
83

அண்ணனிரு மிதப்பிரபஞ் சந்தான்வா திப்ப
      தல்லாமை யானுநூ லாசிரிய வடிவாய்
நண்ணலரு முத்திசா தனமாயுந் தன்னா
      னழுவவொண்ணா மையினானு மனையதுதா னிற்க
வெண்ணரிய சீவகற் பிதமாய வதுதா
      னிருபிரபஞ் சங்கள்சாத் திரத்தொடசாத் திரமாங்
கண்ணுமசாத் திரப்பிரபஞ் சங்கொலிரு திறனாங்
      கழறிற்றீ விரமந்த மெனவவையீண் டுரைப்பாம்.
84

சீவபர விசாரணையே யுரைத்தலரி தாஞ்சாத்
      திரப்பிரபஞ் சங்காமா திகளேதீ விரமாங்
காவலுறுஞ் சாதிகரு மாதிகமொ டேதன்
      கருதுமனக் கற்பிதமே மந்தமசாத் திரத்தின்
மேவுறுமவ் விருதிறனு மாருயிர்மெய்க் காட்சி
      விரோதிகளா தலின்ஞானம் பயிறற்கு முன்ன
மோவுவசாத் திரப்பிரபஞ் சந்தான்மெய்ஞ் ஞான
      வுதவியா யான்மக்காட் சிப்பின்விடு வதுவாம்.
85

தீவிரமந் தங்களுயிர்க் காட்சியுற்ற பின்னுந்
      திகழ்முத்தி பெறற்பொருட்டு விடுவனவென் றறிக
பாவமுறு மவச்சின்னோ பாதிபதி விம்போ
      பாதியுட னத்தியா சோபாதி யெனவே
மேவுமுபா திகளொருமூன் றுளவவற்றை முறையே
      விளம்பியிடிற் சுழுத்தியுரு வாமவித்தை தானே
யாவரண வவச்சின்னோ பாதியாம் பிரத்தி
      கான்மாவுக் கதனதுகா ரியமாம்புத் தியினில்.
86

பற்றியவான் மாப்பதிவிம் பித்திடுத றானே
      பதிவிம்போ பாதியாம் புத்திகத மாய
முற்றுசுக துக்கங்க ளுயிர்நுகர்தல் போல
      முயலுதலே யத்தியா சோபாதி யாகு
முற்றவத்தி யாசவிலக் கணமாம்வே றொன்றை
      யொன்றாகக் கருதலிப்பி வெள்ளியது போல
மற்றதுநால் வகைப்படுமால் மித்தையுட னிதர
      மற்றிதரே தரஞ்சத்தி யங்களினா லன்றே.
87

நெருப்பினொடு புணர்ச்சியாற் புனற்கழற்சி வரல்போ
      னித்தமுறு மான்மாசந் நிதியதனின் முறையே
சரிப்பினொடு காண்டனினை வுறலறிதல் வரலாற்
      றகுந்ததூல மெய்மித்தி யாத்தியா சந்தா
னிருப்பமிருந் தியங்களே யிதராத்தி யாச
      மிதரேத ராத்தியா சங்கரண மாகுந்
தரிப்பரிய மூலவகங் காரமது தானே
      சத்தியாத் தியாசமெனச் சாற்றுவர்தக் கவரே.
88

ஆங்கார மான்மாவிற் குநானெனலாற் கயிற்றி
      னரவமென நிருபாதி காத்தியா சந்தா
னாங்கார வியரலான்மா விற்குநான் கருத்தா
      வாமெனலாற் சிவப்புவலம் போற்சோபா திகமா
மீங்காகுங் கரணதரு மான்மாவிற் கிச்சை
      யினேனானென் றிருத்தலினா லலைபுனலிற் புக்க
வீர்ங்கதிரின் விம்பமெனத் தருமாத்தி யாச
      மெனவுரைப்பர் நான்குடும்ப வானெனநிற் கையினால்.
89

மைந்தர்முத லாயினா ருடனான்மா விற்கு
      மண்ணுலகிற் பஃறியத்த விவகார மெனவே
யந்தமுறு சம்பந்த மாத்திராத்தி யாச
      மாமென்ப ரிவ்வத்தி யாசங்க டம்மா
னந்துநிரு விகாரியான் மாவென்றல் பெற்றா
      நவிறருமைந் தவத்தையுள வவையாவை யென்னிற்
றொந்தமுறு நனவொடுசொற் பனஞ்சுழுத்தி துரியந்
      துரியாதீ தந்தனா மவற்றியல்பு மொழிவாம்.
90

பெருந்தூல வைம்பூத மீரைந்திந் திரியம்
      பிராணபஞ் சகமொடுநாற் கரணமிவை யுருவா
மருந்தூல சரீரத்திற் சாத்துவித குணமோ
      டகரவெழுத் தரிதெய்வம் விழியிடமே யாக
விருந்தாக விதயமல ரட்டதள கதியில்
      விசுவசீ வனும்விராட் டிறையுமொருங் கடைந்து
வருந்தாவில் விடயங்கள் கரணமனைத் தானு
      மருவிநுகர்ந் திடுதல்சா கரணமா மன்றே.
91

பஞ்சபூ தமுஞ்சித்த புத்தியுநின் றொழிந்த
      பதினேழின் மயமாஞ்சூக் குமதனுவி னின்றும்
விஞ்சுரசோ குணமுகர மெழுத்ததிதெய் வந்தான்
      விரிஞ்சனிடங் களமாக நல்லிதய மென்னுங்
கஞ்சமலர்க் கன்னிகா கதியாற்றை சதனுங்
      கனககர்ப் பனுமருவி நனவின்வா தனையை
நெஞ்சமெனுங் கரணத்தா லநுபவிக்கை தானே
      நிகழ்ந்திடுஞ்சொற் பனமென்று நிகழ்த்துவர்மூ தறிஞர்.
92

மேய்ந்துதிரி பார்ப்படக்கி யுறங்களகு போல
      விரிந்தகா ரியங்களையுட் கொண்டுவா தனையோ
டாய்ந்தவான் மாசிரயத் தவத்தையற விருக்கு
      மரும்பகுதி மயமாங்கா ரணவுடம்பிற் றமமே
யேய்ந்தகுண மகரவெழுத் தரன்றெய்வ மிதய
      மிடமாகக் கமலமலர்ப் பொகுட்டுநடுக் கதியா
லோர்ந்தபிராஞ் ஞனும்பரனு மாய்ப்பிரமா னந்த
      முறுமாயா விருத்தியெனு நுண்கரணந் தன்னால்.
93

அநுபவித்தல் சுழுத்தியா மின்னனவா திகண்மூ
      வவத்தையொடு முத்தாம முப்புரமுத் தானம்
பினுமுத்தே யங்களெனும் பரியாய நாமம்
      பெறுமுரைத்த சாக்கிரத்தே யககமல மழித்து
மனவழக்கந் தவிர்ந்துபரந் தனைச்சிந்தித் திடலே
      வருந்துரிய மப்பரமான் மாவின்மன மடங்கன்
முனமுரைத்தல் செய்துரியா தீதமெனப் புகல்வர்
      மொழிந்தவற்றுட் டாவரங்கள் பெறுததலிருட் சுழுத்தி.
94

விலங்குமுத லனபெறுவ சுழுத்தியொடு கனவால்
      விண்ணவர்க்கு நனவுநரர்க் கம்மூன்று மாகுங்
கலங்கலறு மருளர்க்குத் துரியமகா யோகி
      கட்குவரு வதுதுரியா தீதமுதன் மூன்று
மலங்கலுறு மநுடர்க்குத் தமிற்றாமே தோன்றி
      வரும்பந்த மாமேனை யிரண்டுமியோ கத்தா
லிலங்குமுத்தி சாதனமா மவையொன்றி லேயொன்
      றிலாமையாற் காலதே சங்கணிய மம்பொய்.
95

சொற்றவவத் தைகளிலனு சூதனா யறியுந்
      துரியனே யுளனனவு கனவிலறி வுண்மை
பெற்றனமச் சுழுத்தியினிற் பெறலுரைப்பி னெழுந்து
      பிறிதொன்று மறியாது சுகத்துறங்கி னேனென்
றுற்றவிரு நினைவுமநு பவஞ்சுழுத்தி யதனி
      லுறாதுவரா வெனுமருத்தா பத்தியினாற் பொருள்கண்
முற்றுமடக் கிருள்விழிகாண் குதலெனக்கா ரியங்கண்
      முழுதையுமுட் கொண்டபே ரவித்தையிரு ளினையும்.
96

அந்தவவித் தையினதுசூக் குமவிருத்தி தன்னி
      லலையுமரத் திலையிடையின் வெண்ணிலாத் துளிபோல்
வந்திலகி யடங்குநிசா னந்தக்கூற் றினையும்
      வருகரணாந் தராபேட்சை யின்றியே யான்மா
முந்துரைசெய் சுழுத்தியினி லநுபவிக்கை யாலே
      மொழிந்ததனி லறிவுளதா மேதுமறி யாம
னந்துசுகத் துறங்கினே னெனற்கேது விடய
      ஞானமிலா மையுங்குடும்ப நிவர்த்தியுமா முறையே.
97

மன்றசுழுத் தியிலதற்குக் கரியாமா னந்த
      மயவுயிருண் டெனிலொருவ ராகிலுமாண் டறிந்தே
னென்றலில தேதுகா ரணமெனிலோர் பொருளை
      யெடுப்பநீர் மூழ்கினோ னாண்டுளதென் பதுமேற்
சென்றலது புகலவொணா ததுபோலக் கருமச்
      செயலினா லெழுந்துதுணை யாங்கரணங் கூடி
னன்றியதி லறிந்தபொருள் கூறொணா தாகு
      மாதலினா லுயிர்ச்ச்சி தானந்த வொளியாம்.
98

அன்னமொடு பிராணன்மனம் விஞ்ஞான மிக்க
      வானந்த மயமாமைங் கோசமுள வவைதாஞ்
சொன்னமுறை சுக்கிலசோ ணிதத்தாகி நின்ற
      தூலவுடம் பன்னமய கோசஞ்சூக் குமமெய்
மன்னலுறும் பிராணனும்வாக் காதியுமே பிராண
      மயகோச மனமுஞா னேந்தியமும் புணரிற்
பன்னுமனோ மயகோசந் துரியன்சிற் சாயை
      பதிதலொடு லோகாந்த குந்தமே போன்று.
99

இருந்தவாங் காரமுஞா னேந்தியமுங் கூடி
      யிசைதலுறும் விஞஞான மயகோச மாகும்
பொருந்துகா ரணதேக ரூபாவித் தையுந்தாம்
      புகல்விடய தரிசனசா மிப்பியசை யோகந்
தரும்பிரிய மோதமொடு பிரமோத மென்னத்
      தக்கவையு மானந்த மயகோச நானென்
றரந்தைதரு விஞ்ஞான மயகோச வடிவா
      மாங்காரந் தனையான்மா வென்பரறி விழந்தோர்.
100

நீலகுண விசேடமொ டுற்பலவி சேடியந்தா
      னிகழ்தரவேத் தியமாதல் போலிளைத்தே னெனினான்
றூலதனு வொடுங்கேட்ப னானெனினிந் தியத்துஞ்
      சூழ்வனா னெனிற்கரண முடனும்வேத் தியமாய்ச்
சாலவுயிர் தரியனிற் கையினாலாங் காரந்
      தானான்மா வன்றாகி லசேதனவாங் காரஞ்
சீலமுறு புறவிடய மறிவதே னெனிலூ
      சிக்கலின்முன் னூசிசேட் டித்திடுதல் போலும்.
101

வெயிலினிடைக் காட்டுபடி மக்கலமுண் மனையை
      விளக்குதல்போ லுந்துரியன் றனதிருஞ்சந் நிதியு
மியலுறுதற் சைதந்தயப் பதிவிம்பந் தன்பா
      லெய்தலும்பெற் றிடுதலினா லச்சடவாங் காரம்
பயில்விடய வுணர்வினொடு நனவுகன வுழன்று
      பகர்சுழுத்தி தனிலடங்கு மவ்வழக்க முரைப்பிற்
செயிர்தருமாங் காரமடங் குறுசுழுத்தி தன்னிற்
      செறியவித்தை யுட்சுவருந் துயிற்கதவு மன்றி.
102

நடுக்கமறுந் தீபமாந் தனைத்தானே விளக்க
      னவில்பிரத்தி கான்மாவின் சோதியாம் பின்னர்த்
தொடக்கிவரு காலகரு மாதிசமீ ரணனாற்
      றுயிற்கதவந் திறந்திடவவ் வவித்தையது தன்னி
னடுக்குமுத லவத்தைமக தத்துவமாந் தெற்றி
      யடுத்திருந்தாங் காரமெனும் வெண்பளிங்கு மணிதான்
படைத்தலருந் துரியசுடர்ப் பதிவிம்பம் பதியப்
      பட்டுமுனம் போற்சீவ னென்னவே நின்று.
103

சொற்பனமா நடுமனையை விளக்கியே பொறியாஞ்
      சுருங்கையினிற் போந்துநன வெனுமுன்றில் விளக்கு
முற்பகருங் காலகரு மாதிசமீ ரணனான்
      மூடலுமத் துயிற்கதவங் காரியவாங் கார
நற்படிக மணியவித்தை தனிலடங்கச் சென்று
      நனவுகன வெனுமுன்றி னடுமனைக ளிருளுந்
தற்படிக மணிகதுவு மறிவொளிதன் முதலாந்
      தனித்துரிய விளக்கையடைந் தேகமா மன்றே.
104

இத்திறமிங் ககமினது பாவாபா வங்க
      ளிலங்குநன வாதிகளி னவிகார மாகி
யுய்த்துணரு முயிர்வேறொன் றிருத்தலினா லென்று
      முரைத்தவக மான்மாவன் றெனவறிக புறம்பு
வைத்தவிட யங்கடனக் கான்மாவாய்ப் பரமான்
      மாவிற்கு வேத்தியமா தலிற்சடா சடமா
யத்தமதின் முன்பின்போ லொளியலதா மகந்தைக்
      காகஞ்சிற் சாயையான் மாவுடனாம் புணர்ச்சி.
105

வெப்பினே னானெனலாற் சிற்பதிவிம் பந்தான்
      மேவுமாங் காரசம்பந் தத்தினாற் றூல
மெய்ப்படுவ வெம்மைமுத லனவறிதல் கரும
      விளைவாகிக் கருமசமா நானறிந்தே னெனலாற்
றப்பரிய சிற்சாயை யுடனவ்வாங் கார
      சம்பந்தஞ் சிருட்டிமுதன் முத்தியள வாகிப்
பொய்ப்பரிய வியல்பாகு நான்கருத்த னெனலாற்
      புணர்ச்சியிலான் மாவினுட னனையதின்சம் பந்தம்.
106

இசைப்பிலது பிராந்திசென் னியமாகு மென்னு
      மிவைமுழுதுஞ் செப்புதிரி சியவிவே கந்தான்
மிசைப்புகல்வ வஞ்ஞான மாவரண மிக்க
      விட்சேபம் பரோட்சமப ரோட்சஞா னம்பின்
வசைப்படுத லுறுஞ்சோக நிவிர்த்தியதின் மீது
      வருநிரங்கு சதிருத்தி யெனுமவத்தை யேழுந்
திசைப்புறுத லுறுஞ்சீவர்க் காவனவா மிவற்றின்
      றிறமனைத்து முறைபிறழா தினியெடுத்து மொழிவாம்.
107

புன்னெறிகொள் குடும்பியாய் வலியறுமோர் சித்துப்
      போலியாஞ் சீவனுயர் சுருதிவிசா ரத்தின்
முன்னமொரு தன்சொருப மாகியபே ரொளியா
      முதற்றுரிய நிலையறியா திருந்திடலஞ் ஞானம்
பின்னொருகா லுயிரியல்பு கூறுமிடத் தின்று
      பிரத்திகான் மாத்தோன்றா தெனுங்கலக்க மிரண்டு
பன்னியவஞ் ஞானகா ரியமாகு மென்னப்
      பகர்தருமா வரணமென்பர் பலகலைகற் றுணர்ந்தோர்.
108

கருத்தனுமொண் கருமபல போத்துருவுந் தானாய்க்
      கருதியுடம் பபிமானி யாஞ்சீவன் றானே
யுரைத்தலரும் விட்சேபஞ் சுருதிகுரு வுண்மை
      யுரையாலுண் டுயிரெனவே யறிதலசத் தென்னு
நிரைத்தமுத லாவரண நிவர்த்தகமாம் பரோட்ச
      நீபிரம மெனும்வேத மொழிவிசா ரத்தால்
வரத்துரியன் றானெனவே யறிந்திடுத லபானா
      வரணநிவர்த் தகமாகு மபரோட்ச ஞானம்.
109

துரியநிலை யடைந்ததற்பி னான்கருத்த னான்போத்
      துருவென்னுஞ் சீவவுருத் துக்கமகன் றிடுத
லரியதெனு மச்சோக நிவிர்த்தியாஞ் செய்தே
      யடைதலுறும் பலனனைத்து மடைந்தனமென் றமைதல்
பரிவினிரங் குசதிருத்தி யிரண்டுமப ரோட்ச
      பலமாகு மறிவுருவா மான்மாவிற் கென்றுந்
தெரியுமப ரோட்சமுள தாதலினா லவற்குச்
      சேர்தலெவ்வா றஞ்ஞான முதலனவிங் கென்னில்.
110

கடந்துநதி பதின்மர்தமை யெண்ணுங்கா லொருவன்
      கண்டுநவ புருடரைப்பத் தாமவன்றா னெனவே
யடைந்தறியா திருத்தலே யஞ்ஞானம் பத்தா
      மவனிலைகா ணப்படா னென்னுமிரு பிராந்தி
யிடும்பைதரு மாவரண நதியுளவ னிறந்தா
      னெனுந்துக்கம் விட்சேபம் வேறுரியன் மொழியாற்
கிடந்ததொரு துறக்கமென வுளனெனவே யறிதல்
      கிளர்ந்தவவ னிலையென்ற லொடுபகைத்தல் பரோட்சம்.
111

சங்கநவ புருடரொடு முறையெண்ணி நீயே
      தசமனெனத் தனைத்தானே யிருந்தபடி யடுத்த
லிங்குவரு தசமன்கா ணப்படா னெனலோ
      டிகலுமப ரோட்சமா நதியுளிறந் தனனென்
றங்குவரு துயரகறல் சோகநிவிர்த் தியதா
      மடைந்துதன தியனிலையிற் சுகித்திருத்த றானே
துங்கநிரங் குசதிருத்தி யென்றறிக வினிமேற்
      றொல்வேத வாக்கியமாம் விசாரமெடுத் துரைப்பாம்.
112

விரிந்தவிதி நிடேதஞ்சித் தார்த்தபோ தகமாய்
      வேதவாக் கியமூன்று திறனாகு மவற்றுள்
வருந்திமக முதலனசெய் கென்றல்விதி விடுக
      மதுபானா திகளென்கை நிடேதம்விதி யின்றித்
திருந்துசிவ வுயிரயிக்கப் பொருடனையே தெருட்டல்
      சித்தார்த்த போதகவாக் கியமாகு மென்பர்
பொருந்துமறை நான்கிணுநான் குளவாஞ்சித் தார்த்த
      போதகமா கியமகா வாக்கியங்க ளன்றே.
113

உரைத்தவையுட் சிறந்தன்று சாமமறை புகலு
      மோங்குதத்வ மசிமகா வாக்கியமங் கதற்குப்
பரத்தலுறு தற்பதந்தொம் பதத்தொடசி பதமாய்ப்
      பதமூன்றாஞ் சிவமுயிரங் கவற்றயிக்க முறையே
யருத்தமென லாம்பதமே பதார்த்தமொடு வாக்கி
      யார்த்தங்க டமக்குச்சம் பந்தமுறை மூன்றாம்
விரிக்கிலவை தாஞ்சமா னாதிகர ணம்பின்
      விசேடவிசே டியமிலக் கியமொடிலக் கணமாம்.
114

அறைதலுறு பதங்கடமக் கிருபொருளிங் குளவா
      மவைவாச்சி யார்த்தமிலக் கியார்த்தமென வவற்றுண்
முறைமைதரு விராட்புருடன் முதலாகி நின்ற
      மூவுருவ வீசனுமப் பிரமமுமொன் றாகிப்
பிறிதலற நிற்புழிதற் பதத்திற்கெய் துறுவ
      பெயர்வாச்சி யார்த்தமுக்கி யார்த்தமபி தார்த்த
நெறிகொள்விசு வாதிகளுந் துரியனுமொன் றாகி
      நிற்புழிதொம் பதத்திற்கு வருமம்மூ வகையும்.
115

தற்பதத் தினுக்குவிராட் புருடாதி யகன்ற
      தனிநிருபா திகப்பிரம மேயிலக்கி யார்த்தஞ்
சொற்பரவுஞ் சோதிததற் பதார்த்தமென நிற்குந்
      தொம்பதத்திற் குற்றவிசு வாதிகளின் வேறாம்
பொற்பினிரு பாதிகமாந் துரியனிலக் கியார்த்தம்
      பொருந்துறுசோ திததொம் பதார்த்தமென லாகும்
விற்பரவு மிலக்கணைவிட் டதுவும்விடா ததுவும்
      விட்டுவிடா ததுவுமென மூவகையா மன்றே.
116

கங்கையினி லிடைச்சேரி மருவலுறுஞ் சொல்லுங்
      கவின்குந்த மொடு சோயந் தேவதத்த னென்னு
மிங்கிவைக ளுதாரணமா மவற்றினுக்குக் கங்கை
      யெனுமொழிநீர் வடிவந்தன் முக்கியார்த் தத்தைத்
தங்குமிடைச் சேரிதனக் கிடமாகா மையினாற்
      றணந்துகரை காட்டுந்தன் முக்கியார்த் தத்தைத்
துங்கமுறு குந்தமொழி விடாமற்குந் தத்தைச்
      சுமப்பவனைக் காட்டுமென வுணர்ந்திடுக துணிந்தே.
117

முன்னமொழி தருஞ்சோயந் தேவதத்த னென்னு
      மொழியுண்முத லவனென்னு மொழியிறந்த காலந்
தன்னில்வரு தேசவயோ விசிட்டனாந் தேவ
      தத்தனைக்காட் டிடுமிவனென் மொழிநிகழ்கா லத்தி
லுன்னவரு மவையுடை தேவதத்தன் றன்னை
      யுணர்த்திடுமிவ் விருத்ததரு மப்பொருள்க ளிரண்டு
மன்னுதல்செ யயிக்கமுறா மையினாலப் பொருட்கண்
      வருவிருத்த தருமங்க ளனைத்தினையும் விட்டே.
118

விருத்தமறுந் தருமமாந் தேவதத்தன் றனையே
      விடாதுகொளி னவனிவனே யிவனவனே யென்னுந்
தெரித்தலரி தாயதா தான்மயங்கூ டுறுமாற்
      றேரினிதை விட்டுவிடா விலக்கணையி னொடுதா
னருத்தவிலக் கணைபாகத் தியாகவிலக் கணையென்
      றறைதலினா லிதுவேதத் துவமசிவாக் கியத்திற்
குத்திடுவ ருதாரணமா யுரியதென வுண்மை
      யுணர்ந்துடையோ ரஃதெவ்வா றெனின்முறையே யுரைப்பாம்.
119

தற்பதம்வாச் சியார்த்தமா யெலாமறிதன் முதலாஞ்
      சட்குணங்கொள் பரோட்சனாஞ் சிவன்றனையே யுணர்த்து
முற்பகருந் துவம்பதமுக் கியமாய்ச்சிற் றுணர்வு
      முதலாய வீனகுண விசிட்டவப ரோட்ச
கற்பிதசீ வனையுணர்த்து மிம்முரண்கொள் பொருட்கே
      கத்துவங்கூ டாமையினவ் விருபொருளு மடையும்
பற்பலவாம் பரோட்சமுட னபரோட்ச மாகும்
      பகைத்ததரு மத்திறங்க ளனைத்தினையும் விட்டே.
120

இகலிலா வறிவுமாத் திரமாகி நின்ற
      விலக்கியமாம் பிரமகூ டத்தவுயிர் கொள்ளிற்
புகரிலா வதுவிதுவே யிதுவதுவே யென்னப்
      பொருந்துதா தான்மியம்வந் துறுமெனவே யறிகப்
பகவிலா வசிபதமிவ் விலக்கியார்த் தத்திற்
      பரோட்சவப ரோட்சங்கள் மாயாகற் பிதமென்
றுகவிலா துணர்த்தியுறு பலமாமிம் முறையா
      லொன்றாகு மறிவேயுண் டெனல்வாக்கி யார்த்தம்.
121

தூயதத்து வமசிமகா வாக்கியத்தி னாலே
      துரியபாற் குளதேகத் துவமென்கை கடாதி
யாயவுபா திகளகற்றி விசும்பொன்றே யெனவு
      மகற்றிமது டத்தன்மை யிராமனைநீ தானே
மாயவன்கா ணெனவுங்கன் னனைவேடு கழித்து
      மகன்குந்திக் கெனவுமொரு தசமனைமாய் துயரம்
போயகல வொழித்துநீ யேதசம னெனவும்
      புகலுதல்போற் சுபாவசித்த மாகுவதே யன்றி.
122

ஒருமலர்க்குத் துறக்கமெனல் போன்முத்தி விருப்ப
      முதவருத்த வாதமெழிற் பதுமையைத்தே வெனல்போ
லிருமைதரு முபாசனா பரமநுடன் றன்னை
      யிந்திரனென் பதுபோலத் துதிபரமா ளினையே
யருமரசென் பதுபோல வுபசாரி கந்தா
      னக்கிநிமா ணவகனெனும் வாக்கியமே போல
வுரிமைதரு சுகுணசா திரிசமிது கோயி
      னுடம்பென்கை போற்சாதி வியத்தியா மன்றே.
123

கடத்தொடுமட் கநநியமென் வாக்கியமே போலக்
      காரியகா ரணநீலோற் பலமெனும்வாக் கியம்போல்
விடுப்பில்குண குணிதயிர்பாற் கபேதமெனல் போல
      விகாரமே வாரிகணங் கட்கேக மெனல்போ
லடுத்தவங்கி சாங்கிசிவிம்பப்பதிவிம் பங்களினுக்
      கயிக்கமெனல் போல்விம்பப் பதிவிம்ப வாத
மெடுத்துணரி லெனவிங்ஙன் பேதபர மாக
      விசைப்பனவெ லாஞ்சுருதி விரோதமென வறியே.
124

அவ்வகிலங் கட்கெலாம் பொய்ம்மையே புகலு
      மரியதாம் வேதாந்த பக்கமதி லினைய
வெவ்வமறு சுருதிவிசா ரத்தினா லுண்மை
      யெனுமுத்தி கூடுமென லெவ்வாறிங் கென்னி
லவ்வியமென் சொற்பனமா தணைவினான் மெய்ம்மை
      யாயவீ ரியவொழிவுங் கற்பிதமாம் வடிவிற்
செவ்வியவொண் கடவுள்வழி பாட்டினா லிட்டஞ்
      சேர்தலும்போ னூலுணர்வான் முத்தியுஞ்சித் திக்கும்.
125

அருமையெனு முத்திவிலக் காகமூன் றுளவா
      மஞ்ஞான மையம்விப ரீதமென வவற்றுட்
பிரமமல நானென்கை யஞ்ஞான நானப்
      பிரமமோ வலனோவென் றிடலையஞ் சுருதி
வருமினிய வுத்திகளா னான்பரமா யினுமுன்
      வளர்சீவ பாவமுண்டென் குதல்விபரீ தந்தான்
றருமுறையி லஞ்ஞானா திகட்குமுர ணாகுஞ்
      சவணமொடு மனனநிதித் தியாசனங்க ளன்றே.
126

சூதகா திகளினிடைச் சுருதிவிசா ரத்தாற்
      றுணிவுதோன் றுதலெனவே சிவமொடுயி ரயிக்க
மோதுமா ரணமொழியின் றாற்பரியங் கேட்கை
      யுயர்சவணங் கேட்டபொரு ளுத்தியிற்சிந் தித்த
றீதின்மா மனனமவற் றாற்றுணிந்த பொருளிற்
      சித்தமசை வறவிருத்த னிதித்தியா சனந்தான்
மேதையா கியசவண ஞானத்தா லான்மா
      மெய்ம்மையா முக்கியத்தாற் சவணமங்கி யெனலாம்.
127

ஏனையவோ ரிரண்டுமதன் றுணையெனலா லங்க
      மெனலாகு மஃதெவ்வா றெனிற்பொருள்க டிகழத்து
மானதோர் சுடரசைவிற் கருமவலி யின்றா
      மாதலினால் வளிதடுக்குந் திரையெனலா மனன
மேனிமிர்வான் றிரிதூண்டி யொளிர்வித்தல் போலும்
      விளம்புநிதித் தியாசனமென் றறிந்திடுக தெரிந்து
மோனையா மெனவுரைத்த சிரவணத்திற் குள்ள
      முறையிலறு வகையிலிங்க தாற்பரிய முரைப்பாம்.
128

அவையுபக் கிரமமுப சங்கார முடனே
      யப்பியா சம்பினபூரி வதைபவமோ டுற்ற
நவிலருத்த வாதமுப பத்தியென லாகு
      நற்சிருட்டி முன்சகமெய்ப் பரமாயிற் றென்றுஞ்
சிவமதற்குச் சுவகதா திகளிலையென் றகண்டஞ்
      செப்புமதே யுபக்கிரமஞ் சகஞ்சிவத்தின் மாய்த்துப்
பவமகலத் துரியற்குப் பிரமமுட னயிக்கம்
      பகர்ந்தத்து விதங்கூற லுபசங்கா ரந்தான்.
129

கூறுமிவை யிரண்டுமோ ரிலிங்கமென வறைவர்
      கூடத்த னேபிரம மெனமறித்து மறித்துந்
தேறவுரைத் திடலப்பி யாசமாந் துரியன்
      றிகழபிரமா ணாதீத னென்கைபூர் வதையாம்
பாறிலுயி ரொன்றறித லெலாமறித லென்கை
      பலம்பிரத்தி கான்மருவு வாம்பிரமந் தனக்கு
மாறரிய வைந்தொழிற்கத் துருத்துவஞ்செப் புறுதல்
      வயங்கருத்த வாதமென மதித்திடுக தெரிந்தே.
130

கடத்தினுக்கு மண்ணினையு நூற்குலண்டு தனையுங்
      காரணமென் பதுபோலப் பிரமமே முன்னம்
படைத்தசகத் காரணமென் பதுவேதிட் டாந்தம்
      பகருத்தி தர்க்கமனு மானமிவை மூன்று
மடுத்துவரு மனனசக காரிகளா மவற்று
      ளாருயிர்க ளனேகம்வியா பகமெனவே கூறுந்
தடுப்பரிய சாங்கியமே முதலாய மதத்துட்
      சாற்றுமுயி ரெலாமுடம்பு தொறும்புணர் யுறலால்.
131

இந்தவுடம் பிவற்கேயாம் போகசா தனமற்
      றேனோர்க்கன் றெனப்போகத் திதிபுகலொ ணாதாம்
வந்தவுடம் பெத்திறத்து மிவன்வினையான் வரலான்
      மற்றிவற்கே யெனின்வினையு மெவர்க்குமிலை யோதான்
முந்தையுடம் பபிமானத் தாற்செய்வினை யிவற்கே
      முற்றுமெனி னவ்வபிமா னமுமுந்தை யுடல்சே
ரந்தவுயி ரனைத்திற்கு மிலையோதா னிவ்வா
      றனவவத்தை நீக்கலரி தனாதியுயி ரெனலால்.
132

செப்பரிய வேகான்ம பக்கத்திற் போகத்
      திதியிலையென் றனேகான்ம பக்கமது கொளினு
மிப்பரிசு மிகுபோகத் திதிகூடா தாயிற்
      றிச்சங்கை யிருமதத்து மொக்குமே யென்னிற்
பற்பலவி லேகான்ம பக்கமதில் விம்பப்
      பதிவிம்ப நியாயத்தாற் கரணவசை வாதி
மெய்ப்பரிய பலதிறத்தா லெண்ணிகழ்ந்த போகம்
      விளைவுகூ டுதலௌ¤தென் குதலுத்தி யாமால்.
133

தருக்கவனு மானவிலக் கணங்கடா மிசிரா
      சாரியர்கண் முதலானோர் கண்டனா திகளில்
விரித்தமைத லாலிதுதான் சுவாநுபவ நூலாய்
      விளங்குதலா வீண்டுரைப்பிற் பெருகுமெனுங் கருத்தா
லுரைக்கிலமந் திரயோகம் பரிசயோ கம்பி
      னுயர்பாவ யோகமுட னபாவயோ கந்தான்
றெரித்தமகா யோகமெனு மிவைகளோ ரைந்துந்
      திகழ்கின்ற நிதித்தியா சனவடிவ மாமால்.
134

ஓங்காரா திகளனுசந் தாநத்தாற் பரத்தி
      லுள்ளமடங் குதலேமந் திரயோக மதனோ
டீங்காகு மனபவன மொன்றாய்மூ லத்தி
      னிருஞ்சுழினை வழிசென்று சென்னிநடு விருந்த
தேங்கான்ம வொளியின்மனோ லயமாதல் பரிசஞ்
      சிரந்துறக்கஞ் செவிதிசைக ளிருசுடர்கள் விழிதீ
பாங்காய முகமுந்தி விசும்புநிலம் பதமாம்
      பரமனுரு வாயவிராட் புருடவடி வெனினும்.
135

அன்றியள வுறுபெருந்தோட் படைபணியோ டுற்ற
      வண்ணல்வடி வெனினுநினைந் தவயவங் கடம்மி
லொன்றொன்றை விடுத்துநின்ற வவயவிமாத் திரமா
      முண்மையாம் பிரமத்தின் மனமடங்கல் பாவஞ்
சென்றளவு கரணமுறா வொருபிரமந் தன்னிற்
      சிந்தையடங் குதலபா வம்படைப்பி லொழிவிற்
றன்றெரித றெரியாமை யிடத்தினோர் பரிசாய்த்
      தன்வடிவாம் பிரமத்தின் மனமிறன்மா யோகம்.
136

பகர்ந்தவுயி ருண்மைவிலக் காகவரும் பூதப்
      பதிபந்தம் வர்த்தமா னப்பதிபந் தம்பி
னிகழ்ந்தவாகா மியப்பதிபந் தங்களென முத்தி
      நேயமொடு துறந்துகுரு பரனையறிந் தடைந்து
மகிழந்துசவ ணாதிகமுற் றிடினுமுன் னுகர்ந்த
      வனிதாதி விடயசுக வாதனையாற் றினமும்
புகுந்துமன நிலைகலக்கி யுயிருண்மை யுறாமற்
      போக்கியிட றனைப்பூதப் பதிபந்த மென்பர்.
137

மடிவிடயா சத்தியபி மானமொடு குதர்க்க
      மறுகுறுசிற் றினஞ்சேர்தல் சபலத்து வாதி
யடைதலின்மெய் தெரிந்துமுயி ருண்மையுறா தழித்த
      லதுவாகும் வர்த்தமா னப்பதிபந் தங்காண்
விடலரிய சனனமினுஞ் சிலவடைந்தா லன்றி
      விடாதுபிர மாதியுல கிச்சையெனுந் தோட
மொடுமருவி மறைப்பொருளை யுணர்ந்திடினு மான்ம
      வுண்மையுறா தழித்தலாகா மியப்பதிபந் தந்தான்.
138

பந்தமவை மூன்றினையுங் கடந்திடுவான் பயில்வ
      பகர்ஞானம் வைராக முபரதியா மவற்றின்
வந்தணுகு மிலக்கணங்கா ரணமொடுதான் சொருப
      மருவுகா ரியமெனவே தனித்தனிஞா னக்கு
முந்துசவ ணாதிகமே காரணமான் மாவு
      முலவகங் காரமும்வே றாகுதலே சொருபம்
நந்துமகங் காரகத மயற்குத்தான் கரியாய்
      நணுகுதலே காரியமென் றறைகுவர்மூ தறிஞர்.
139

வேண்டும்வை ராக்கியத்திற் குற்றவநி தாதி
      விடயத்தி னிலையாமை முதலாய குற்றங்
காட்லது காரணமெத் திறத்தானு மதனைக்
      கழன்றிடுதல் சொருபம்பின் புறாமைகா ரியமா
மாண்டவுப ரதிக்கியமா திகளேகா ரணஞ்சூழ்
      மனமொடுங்கல் சொருபமாம் புறக்கருமந் தன்னின்
மீண்டுபுகு மயலறுதல் காரியமென் றிசைப்பர்
      விளம்பலுறு ஞானாதி கட்கவதி மொழிவாம்.
140

தக்கதே கான்மபா வம்போலப் பிரமந்
      தானென்னுந் திண்மைஞா னத்தினுக்கா மவதி
மிக்கபிர மாதிபதந் துரும்பெனவே நினைத்தல்
      விளம்பும்வை ராக்கியத்திற் கவதிசுழுத் தியன்போற்
றொக்ககரு மங்களனைத் தினையுநினை யாமை
      தோன்றுமுப ரதிக்கவதி யாகுமவை மூன்றும்
புக்கொருவ னடைந்திடுமே லதுமுன்னம் விடாது
      புரிந்தமா தவத்தின்வலி யென்றறிக தெரிந்தே.
141

குறையகலும் வைராக்கிய முபரதியா மிரண்டுங்
      கூடிஞா னங்கூடா தாயின்முத்தி யரிதா
முறுமினிய மிசையுலக பதங்கிடைக்கு ஞான
      மொன்றுமடைந் தவையிரண்டு மிலையாயி னிற்ப
முறியுமர நெடும்பணையோன் விழநினைவின் றியினு
      முறியவிழல் போலவே தேகாந்த மதனிற்
பெறுவனுயர் முத்தியினை யுடற்கமைந்த வினையாற்
      பிறந்திடுந்துக் கானுபவ முளதாத றிண்ணம்.
142

ஆற்றரிய சுபேச்சைவிசா ரணைதனுமா நசிசத்
      வாபத்தி யசம்சத்தி பதார்த்த பாவனையே
மேற்றுரிய காமியெனு மிவற்றினைமூ தறிஞர்
      விளங்குசத்த ஞானபூ மிகையென்ப ரவற்றுட்
டோற்றிடுநான் மூடனா யிருந்தகா ரணமென்
      சுருதிகுரு வாலறிவ லெனநினைதல் சுபேச்சை
மாற்றரிய சுருதிகுரு வாற்சிறிது தோன்றும்
      வைராகத் துறுதல்சதா சாரம்விசா ரணையே.
143

மருவலுறு சுபேச்சைவிசா ரணவலியால் விடய
      வலியறுத றான்றநுமா நசியவற்றின் பயில்வால்
விரவுநன வாயவுல கினைக்கனவென் றெண்ணி
      மெய்த்தவான் மாவுண்மை கருதல்சத் வாபத்தி
பரவலுறு முலகுதோன் றாதுசுழுத் தியன்போற்
      பகரறிவு மாத்திரையாய் நிற்றலசம் சத்தி
யொருவிவா சனையனைத்து மிகுதுயிலோன் போல
      வுயிரானந் தத்தொடுங்கல் பதார்த்தாபா வனையாம்.
144

உண்டிலையென் னாமலகங் கிருதிநிரங் கிருதி
      யுறாமலறி வுருவாய வத்துவித பதத்திற்
கண்டதொரு வறுங்குடம்போ லுட்புறஞ்சூ னியமாங்
      கதிதுரிய காமியா முபரதியை யடைந்து
கொண்டிலக லுறுதிரிசி யாநுவே தம்பின்
      கூறலுறு சத்தாநு வேதநிரு விகற்ப
மெண்டருசட் சமாதியாம் புறமொடக மென்னு
      மிருபேத மடைந்தவற்றை முறையினிவண் மொழிவாம்.
145

கடாதிவிட யத்தினிலொன் றினைக்குறித்து நாம
      கற்பனையோ டுருவமெனு மாயையதன் றிறத்தைத்
தடாதுவிடுத் தத்திபா திப்பிரிய மென்னுஞ்
      சச்சிதா நந்தமாம் பிரமத்தின் றிறத்தை
விடாதநுசந் தானஞ்செய் திடுதலே புறத்து
      மெய்த்திரிசி யாநுவே தப்பெயர்கொள் கின்ற
கெடாததொரு சவிகற்ப சமாதியென லாகுங்
      கிளர்ந்தபுறச் சத்தாநு வேதமது கிளப்பில்.
146

சச்சிதா நந்தவுரு வாகுவதே பிரமந்
      தானெனவே தியானித்த லதுவாகு மென்க
விச்சமா திகள்பயின்ற வலியினாற் றோன்று
      மிரும்பிரமா நந்தநிலை தனின்மனஞ்சென் றொடுங்கி
நிச்சலமா யலையில்கடல் போலிரத்தல் புறத்து
      நிருவிகற்ப சமாதியா மநோகதகா மாதிக்
கச்சமறு கரிதானென் றெண்ணுதலுட் டிரிசி
      யாநுவே தப்பெயர்கொள் சவிகற்ப சமாதி.
147

சங்கமறு சச்சிதா நந்தவொளி யுருவந்
      தானெனச்சிந் தித்திடலுட் சத்தாநு வேதம்
பொங்குறுதன் னநுபூதி ரசந்தோன்று மதனாற்
      புகன்றதிரி கியஞ்சத்த மெனுமிரண்டு மகன்றே
யிங்கசைவி றீபமெனப் பந்தமற விருத்த
      லிலங்குறுமுண் ணிருவிகற்ப சமாதியிவ்வா றானுந்
தங்கலுற வொழுகுமியோ கிக்குமன மெங்குச்
      சரிக்குமாண் டாண்டெலாஞ்ச மாதியென லாகும்.
148

தக்கமா ஞானபல நான்குதுக்கா பாவஞ்
      சர்வகா மாத்தியொடு கிருதகிருத் தியமே
தொக்கபிராத் திப்பிராப் பியங்களென வவற்றுட்
      சொல்லியதுக் காபாவ மிகபரத்தா லிரண்டாம்
பொய்க்குமோர் தூலவுடம் பொழிவெழிறீ நாற்றம்
      புகுபிணிகண் முதலனவுஞ் சூக்குமதே கத்து
மிக்ககா மாதியுங்கா ரணத்தினிலவ் வாதி
      வியாதிகட்கு வித்தாம்வா சனையுமிகத் திடும்பை.
149

மித்தையெனு மாயாகா ரியவுடம்பா திகளின்
      வேறாய துரியஞா னத்தின்மே லாக
வைத்தவொரு போகபோத் துருக்களிலா மையினால்
      வரஞானிக் கவ்விடும்பை மூன்றுமிலா திருத்தல்
பொய்த்தவிக லோகதுக்கா பாவமென லாகும்
      புண்ணியம்வந் தென்றுபோம் பாவமென நின்ற
சித்தமுறு சிந்தனையே பரலோக துக்கந்
      தெரியினெனப் புகன்றிடுவர் திருக்கறுநல் லறிஞர்.
150

ஞானநிலை யடைதலுந்தா மரையிலைநீர் போல
      ஞானியிரு வினையுமுறா மையினாலிந் தனத்திற்
றீநணுகு மழலிவிற கிலாததுபோற் கருமச்
      செயலிலவ னாமவனி லஃதிரா மையினான்
மானழலுண் வனத்திலுறா ததுபோல ஞான
      மயனைவினை யாவுமுறா மையினாலச் சிந்தை
தானவனி லெழாதிருத்த றனையுரைப்பர் மேலோர்
      தக்கபர லோகதுக்கா பாவமென வன்றே.
151

எல்லாவாழ் வினையுமுறுஞ் சார்வபௌ மாதி
      யிரணியகர்ப் பாந்தமாய் மேன்மேல்வேண் டுற்ற
நல்லானந் தங்களெலாம் பற்றிலா வறிஞ
      னணுகுதலான் ஞானங்கொண் டறிசிவத்தின் கூறாய்த்
தொல்லானந் தங்களெலா நிற்கையினா லவற்குத்
      தோமிலகண் டானந்தச் சித்திதோன் றுதலே
பொல்லாத வினைப்பகையைக் கடந்தபெருந் தவர்கள்
      புகன்றிடுவர் சகலகா மாப்தியென வன்றே.
152

தத்துவஞா னத்திற்கு முன்னமிங் கடையத்
      தக்கவிட்டம் பெறவனிட்ட வொழிவிற்கு வேண்டி
வைத்தவுழ வாதிகளுந் துறக்கமுதல் பெறற்கு
      மகமுதலா யினவுமுத்தி சாதனமா ஞாந
சித்தியுற மிகுசவணா திகமுமறி ஞர்க்குச்
      செய்வனவாந் தத்துவஞா னத்தின்பின் குடும்பப்
புத்தியொடு பலபோகத் திச்சையிலா மையினாற்
      புகன்றவுழ வாதிதொழி லியாவுமிலை யாமால்.
153

வந்துசிறு சாளரத்திற் றோன்றுபர மாணு
      வான்திரின் மிகுமொளியிற் றோன்றிடா வாபோ
னந்தலுறு சிற்றறிஞன் விடயமாங் கரும
      ஞானியிடைத் தோன்றாமை யாலியற்றத் தக்க
முந்துமக முதலனவிங் கிலைபிரமா னந்த
      முதலுண்மை யெய்தலாற் சவணாதி யெல்லாஞ்
சிந்தையுற வியற்றுமள வாகுமதா லிதுவே
      செப்பியவக் கிருதகிருத் தியத்துவமென் றறியே.
154

முற்றலுறு விசிட்டபுண் ணியபரிபா கந்தான்
      முத்திவிருப் பரியகுரு வழிபாடு பெருநூல்
வெற்றிதரு சவணாதி யறிவறியா மைகளின்
      விவேகமிகு மஞ்ஞான வழிவொடுதன் னுண்மை
பெற்றசமு சாரதுக்க நிவிர்த்திநிசா னந்தப்
      பேறெய்த லேபிராத் திப்பிராப் பியமாம்
பற்றுமுயர் முத்திவகை யிரண்டாகு மவைதாம்
      பகர்சீவன் முத்தியொடு விதேககை வல்யம்.
155

அறிவுடையார்க் ககமான்மா வொடுவருசம் பந்த
      மகறலினாற் பிறருடல்போற் றன்னுடலந் தனிலு
முறுதிதரு மபிமான மின்மையே யாகி
      யுண்ணுமநு பவவொப்பால் வருபிரா ரத்த
வறுநுகர்வுண் டாஞ்சுழுத்தி யின்வலியே போல
      மந்தாநு சந்தான மாதலிற்றே காதி
செறியபிமா னங்கழன்றுங் கடமுதித்துஞ் சுழலுந்
      திகிரிபோல் வாதனையா லுறல்சீவன் முத்தி.
156

பரமமா ஞானந்தோன் றுதலுமே கதிர்முன்
      பாயிருள்போ லஞ்ஞானத் துடனதன்கா ரியமாம்
புரமுதலா யினவனைத்து மகன்றிடுத றானே
      புகலரிய விதேககை வல்லியமென் றிசைப்ப
ருரமுறுமிங் கிதுவாகச் சீவன்முத்தி யுளதென்
      றுரைப்பதெவ்வா றெனிற்கயிற்றி னரவமயக் கொழிந்தும்
வருமதன்கா ரியமாகும் பயகம்ப மாதி
      மருவுதல்போன் ஞானத்தா லஞ்ஞானங் கெடினும்.
157

அதனதுகா ரியமாகு முடம்பாதி நிற்கு
      மதனானும் பிரமஞா னந்தோன்றும் பொழுதே
சிதைதருமஞ் ஞானமுட னுடம்பொழியு மாயிற்
      றிகழ்பிரம வித்தியா சம்பிரதா யந்தான்
கதியொழியு மதனானும் பரசிவனாற் பிரமன்
      கமலனா லுயர்பிரசா பதியவனான் மநுவாம்
புதமநுவான் மநுடருணர்ந் தனரெனவே முறைமை
      புகல்சுருதி விரோதமா மதனானு மன்றே.
158

செஞ்ஞானிக் குரித்தாகுஞ் சேர்சீவன் முத்தி
      சித்தித்தற் குற்றபிரா ரத்தவா தனையோ
டஞ்ஞான லேசசற் பாவவுடம் பாட்டா
      லாகநிலை யுஞ்சீடர்க் குபதேசா திகமு
மெஞ்ஞான்றுங் கிடைத்திடுமா லச்சீவன் முத்தற்
      கிரிதருசஞ் சிதமங்கி புகுமுளிபுற் போல
மெய்ஞ்ஞானத் தாற்பிரா ரத்தநுகர்ந் தொழியு
      மேல்வினைகூ டாதனதி காரியா தலினால்.
159

பெற்றவுயர் ஞானத்தா லொழிந்தவினை தானே
      பிராரத்த போகத்தை யளிக்குமெனி லதுமே
லுற்றவுட லுற்பத்தி தனையுமியற் றுறுமென்
      றுரைப்பில்வறு விதைநுகர்ச்சிக் கன்றியே முளைக்கு
மற்றதுதான் காரணமன் றதுபோல ஞானி
      வருகரும நுகர்ச்சியினா னேயொழிவ தாகி
யற்றமுறு பிறவிமேல் விளைத்திடுதற் கேது
      வாகாதென் றியம்புறுவ ரறிவறிதக் கவரே.
160

அறைந்தநுகர் வினையதுதான் லோகயாத் திரைக
      ளனதிகரித் துறுநரற்கே யோருடம்பு தன்னிற்
செறிந்துநுகர் வாமவற்றி னதிகிருத ராகிச்
      சிறந்தமா புருடற்குத் தசசங்கை யுடம்பி
னுறைந்தலது தீர்ந்திடா தெனினுமறைப் பின்றி
      யுறுதலா லொருவனுக்கிங் கிளைமைமுதற் பேதம்
பிறந்திடினு மவனுக்கோ ருடம்பேயாய் நின்ற
      பெற்றிபோ லாகுமென வுணர்ந்திடுக தெரிந்தே.
161

விடயங்க ளனைத்தினுக்கும் பொய்ம்மைசா திக்கு
      மெய்ஞ்ஞானந் தனக்குமவைக் குண்மைசா திக்கு
முடலினுகர் வினைக்குமொன் றற்கொன்று விரோத
      முண்மையினான் ஞானிக்கு நுகர்வெங்ங னென்னிற்
கெடுகனவு முதலவற்றுண் மைதுனா திகளாங்
      கேடினுகர் வாதல்போற் பிராரத்த போக
விடயங்க ளுண்மையா யலதாகா தென்னும்
      விதியின்மை யானுகர்வு முணர்வுமுர ணாவால்.
162

வந்தமய லொழிந்தளவே யிப்பியிடை வெள்ளி
      மாய்தல்போ லறிவினா லஞ்ஞானங் கெடலு
மிந்தவுல கதுதோற்ற மேயிலா மையினா
      லெங்ஙனமாம் வினைப்போக நுகர்ச்சியெனி லிப்பி
தந்தவிர சதநிருபா திகப்பிரமை யாகுந்
      தன்மையா லுணர்ந்தளவில் வெள்ளியுரு வொழியும்
பந்தமுறு மிதுசோபா திகமாகு மிதனாற்
      பகர்ந்ததுபோ லன்றாமற் றெங்ஙனெனி லுரைப்பாம்.
163

தடத்தினுயர் கரையமர்வோ னத்தடத்துப் புனலிற்
      றானதோ முகமாக விருப்பதுபொய் யென்று
படைத்ததௌ¤ வுளமொடிருப் பினுமதோ முகமாம்
      படிவந்தோன் றுதல்போல மூலவகங் கார
மடுத்துவரு சீவபா வாதிகமோ மித்தை
      யறிதுரியன் றானெனவே யுணரினுஞ்சீ வாதி
தொடுத்தவுல குறுதலினாற் சீவன்முத் தன்றனக்குத்
      துய்க்கும்வினைப் போகவிவ காரமுடம் பாடாம்.
164

சீவன்முத்தற் குரியனவா மயித்திரியே கருணை
      திகழ்முதித முபேட்சையெனுஞ் சற்குணங்க ளவற்றுண்
மேவுறுசற் புருடரொடு நட்புமயித் திரியா
      மெலிதருதுக் கிகளிடத்தி னிரக்கமே கருணை
யோவறுநற் புண்ணியர்பால் விருப்பமே முதித
      முவப்புவெறுப் பிரண்டுமிலா துலகதனி லியற்றும்
பாவிகளை விடுதலே யுபேட்சையென வறிகப்
      பயனைந்தச் சீவன்முத்தற் குளவவையீண் டுரைப்பாம்.
165

ஞானரக்கை தவஞ்சகல சம்வாத முடனே
      நவிறுக்க வொடுக்கமொடு சுகாவிற்பா வந்தா
னானவற்றுண் மருவும்வா சனையழிவு மனத்தி
      னடக்கங்க ளாற்புத்தி நிருமலாமா யிருத்தன்
ஞானரக்கை மனம்பொறிகட் கொருமையே தவமா
      ஞானியென வுலகமெலாம் வழிபடல்சம் வாத
மானமனக் கிலேசமற லேதுக்க வொடுக்க
      மவற்றினாற் பந்தமறல் சுகாவிற்பர வந்தான்.
166

குறிகளோர் பத்துளவாம் ஞானமயற் கவைதாங்
      குரோதமின்மை வைராக்கியம் பொறிபுலன்க ளடக்க
லறமுதவு சமைதமையே சனப்பிரியத் துவமோ
      டலோபமொடு கொடையபய நிருமதமென் றறிக
நெறிமருவு சீடரொடு பத்தருதா சீனர்
      நிலையில்பா விகளென்னு நால்வகையோ ரிடத்து
முறையினநுக் கிரகம்வந் துறுமருள்கொள் சீவன்
      முத்தனா லென்பரவை முறையினெடுத் துரைப்பாம்.
167

தெரிவரிய சீவன்முத்தன் றனைநம்பு மதனாற்
      சீடற்கு முத்தியுமன் பொடுவழிபா டதனைப்
புரியுமுயர் பத்தற்கு நல்வினையு மவன்றன்
      புனிதமுறு சரிதமது கண்டவுதா சீனர்க்
குரியபுண் ணியவிருப்பு மவன்றன்வடி வினைக்கண்
      ணுறுதன்முத லானவற்றாற் பாவிகட்குப் பாவ
விரிவுமுறு மென்பர்தருக் காதியா லாத
      லெங்ஙனெனின் முத்தனாற் பிரமோப தேசம்.
168

மறைப்பகலு மொருபிரம சொருபமா தலினான்
      மகிழ்ச்சிவெறுப் பிலாவீசற் கநுக்கிரகஞ் செயவு
மொறுப்புறவும் வரும்வினையி னோராலத் தொழில்க
      ளுறுதல்போற் சாதகர்தம் பக்குவபே தத்தாற்
சிறப்புறுநல் லுபதேசா திகண்ஞானிக் கெய்துஞ்
      செப்பியவிவ் விலக்கணமொ டிராதுபல முறையாற்
றுறப்பிலருட் சீவன்முத்த ரிருப்பதென்கொ லென்னிற்
      றுணிவுதோன் றுறமுதுநூ றொகுத்தபரி சுரைப்பாம்.
169

வந்தணையும் பிராரத்த வாசனைதீ விரமே
      மத்தியமந் தஞ்சுத்த மெனவொருநான் காகும்
பந்தமறு ஞானியா யினும்போகத் தழுந்திப்
      பசுப்போலத் தன்மகிழச்சி மாத்திரமா யிருத்தன்
முந்துரைசெய் தீவிரம்போ கச்சிறப்புற் றிடினு
      மொழியான்ம தற்பரனாய் வினோதமே புரிந்து
மைந்தரென விருத்தன்மத் தியம்போக மனைத்து
      மாற்றிமிது னம்போலா னந்தமுறன் மந்தம்.
170

உலகவழக் ககன்றுநிரு பாதிகான் மாவி
      லுற்றதற் பரனாகிப் பரமுத்த னெனவே
யிலகுசுகத் துடனிருத்தல் சுத்தவா சனையா
      மென்பரிந்நால் வகையாகுங் கருமவா சனையாற்
றலைமைகொண்முத் தர்கள்வே றுவேறாய வொழுக்கஞ்
      சாரினுஞ்செந் நெறிகோண நெறிபெருமா நதிக
ளலைகடலிற் புகுதல்போன் முடிவின்மெய்ப் பரமா
      யமர்தருநன் முத்திசுக மொருபரிசென் றறியே.
171

இச்சையுட னநிச்சைபிற ரிச்சையெனு மிவற்றா
      லியம்பலுறு பிராரத்த மூன்றுவகைப் படுமா
லச்சுரர்க ளானும்விலக் குதற்கரிய வாகு
      மபத்தியஞ்செய் திடறனக்கே கேடெனவிங் கறிந்து
வைச்சுமது புரிவித்த லிச்சைசெய்யே னெனினு
      மன்னவர்தம் மாணைபோற் செய்வித்த லனிச்சை
யிச்சையனிச் சைகளின்றி யிருந்துமய லோரர
      லின்பதுன்ப நுகர்வித்தல் பிறரிச்சை வினையாம்.
172

இப்பரிசு மூவகையாம் பிராரத்த விளைவா
      லெண்ணில்பல வொழுக்கமாஞ் சீவன்முத்தற் கிந்த
மெய்ப்பொருளை வதிட்டனா ரதன்றுருவா சன்சீர்
      வியாதனொடு சுகன்வாம தேவனருட் சனக
னொப்பரிய பரதனெழிற் கௌதமனே முதலா
      யுளர்வருத்த னாபேத முணர்த்தலுறு மிங்ஙன்
றுப்புதவு பிராரத்தங் கொளினஞ்ஞா னிக்குஞ்
      சுத்தனுக்கும் வேறுபா டெங்ஙனெனின் மொழிவாம்.
173

மண்ணுலகில் விராத்திரியர் சோத்திரியர் தமக்கு
      மறையொழித லோதலா லன்றியுணன் முதலா
யெண்ணவரு செயலான்வே றிலாமையது போல
      விதயபந்த முறலொழித லாலன்றிப் போக
முண்ணுநிலை யதனாலஞ் ஞானமுடை யோர்க்கு
      முணர்வுமய மாய்நின்ற சீவன்முத்தர் தமக்கு
நண்ணிவரும் வேறிபா டிலையெனவே நவில்வர்
      ஞானநூல் பலவுணர்ந்த நல்லுணர்வி னவரே.
174

தத்துவஞா னத்தினாற் பிரமமடைந் திடுமேற்
      றறுகண்வரிப் புலிகண்டோன் போற்சீவத் துவத்தை
யத்தலையே யழித்திடுமா தலினாலச் சீவ
      னழிவுதனக் குடன்படுமோ வெனிற்கடவுட் டன்மைக்
குய்த்தவா தரவினாற் கங்கைமுத லவற்று
      ளொழிப்பதனுக் கிசைவர்நரத் துவமதுபோ லென்றும்
பொய்த்தலிலாத் துரியவடி வாம்பிரமத் துவத்திற்
      பொருந்தத்தன் கேட்டினுக்கிங் குடம்படுஞ்சீ வன்றான்.
175

வாதரா யணன்முதலோர் போற்சாப முடனே
      மற்றருள்செய் வலியுடையோன் றத்துவஞா னத்தோ
னேதிலா னலனெனிலவ் வலிதவத்தின் பலமா
      மிலங்குதத் தவஞான பலமன்றா மாயின்
மாதவமே ஞானத்திற் கேதுவெனுஞ் சுருதி
      வழக்கினாற் றவமிலர்க்குத் தத்துவஞா னந்தா
னேதெனிலாஞ் சாபாதிக் குச்சாகா மியமே
      யேதுநிட்கா மியதவஞா னத்தினுக்கென் றறியே.
176

வேதவியா சாதிகட்கு ஞானம்வலி யிரண்டு
      மேவுமே யெனிலவர்கட் கிருதவமு முளவா
மாதலினா லவ்விரண்டு மாகுமொரோர் தவமே
      யாயினொவ்வொன் றேயடையு மதனான்மா றின்றா
மேதையாஞ் சாபாதி வலியிலர்க ளாகி
      விதியிறத் துவஞானி தனைக்கிரியா நிட்ட
ரோதுவார் நிந்தையெனி லவர்தமக்கும் விடயத்
      துழல்பவரா னிந்தையா தலிற்குறைவின் றாமால்.
177

உலகிறந்த சீவன்முத்த னுகர்வினைவா சனையா
      லுண்பொருள்கள் பலகவர்ந்து மௌனமே யுற்றும்
பலதிறங்கண் மொழிந்துமுப தேசநெறி புரிந்தும்
      பரதவித்து மகிழந்துமிகு வேடங்கள் புனைந்துங்
கலைதுறந்து முடையுடுத்துங் கல்விபல பயின்றுங்
      கல்லாது மாதர்முயக் கிடையுற்று மிவ்வா
றலகிறந்த நடையுறினு மருள்விளையாட் டென்றே
      யவன்றனைநம் புகவைய மொருசிறிது முறாமல்.
178

என்றுமெவ் விடத்தினுமோ ருடம்புமுறா தொன்றா
      யிருந்தசச்சி தானந்த சிவசொருப மாத
னன்றிதரு விதேககை வல்லியமென் றிசைப்பர்
      நவின்றவதை யெய்துமா றெவ்வாற்றா லென்னிற்
பொன்றலினித் தியகருமா நுட்டானந் தன்னாற்
      புண்ணியமப் புண்ணியத்தாற் பாவவொழி வதனாற்
குன்றலறு சித்தசுத்தி யதனாற்பொய்க் குடும்பக்
      குற்றநிகழ் வதனான்மெய்த் துறவுற வதனால்.
179

முத்திவிருப் பதனானே புறக்கரும வொடுக்க
      மொழிந்ததனால் யோகநிலை முயற்சியது தன்னாற்
பொய்த்தலறு துரியவிழை வத்துரிய விழைவாற்
      புகலருமா வாக்கியவா ராய்ச்சியத னானே
யத்துவித ஞானமத னாலவிச்சை நாச
      மதனாற்பொய்த் துவிதமயக் கழிதலத னானே
மெத்துசுக துக்கநினை வொழிவதனால் விருப்பு
      வெறுப்பறுத லதனாலொண் விதிவிலக்கோய் வதனால்.
180

வினையிரண்டு மகறலத னாற்றேக பாவ
      விச்சிந்தி யதனானே பாசமெலா மொழிதல்
பினையறைந்த வதனானே பராபரமாய் முடிவாய்ப்
      பெயர்சாதி குறிபெறா தொன்றாகி வாக்கு
மனமிறந்து நித்தியா னந்தமய மாகி
      மறிவிலா விதேககை வல்லியம்வந் தெய்து
மெனவறிந்து துணிந்திடுக சுருதிகுரு பரனா
      லின்பவீ டடையுநெறி விரும்புறுமுத் தமரே.
181

வேதமுத லாகியநூ லனைத்தினுஞ்சொல் பொருளை
      விளங்கியிடக் கரதலமா மலகமெனக் காட்டிப்
போதமய மாகியபே ரானந்தத் தழுத்தும்
      பொருவிகந்த விந்நூலை முத்திபெறற் குரிய
சாதனநான் கினையுமடைந் தெவரானு மென்றுந்
      தடுப்பரிய பிறவிநோய் தணிப்பதனுக் கெண்ணி
யாதரவி னருட்குரவன் றனைத்தேடி யுருகு
      மன்புடையோர் தமைக்காணி னளித்திடுக வுவந்தே.
182

- திருச்சிற்றம்பலம் -
பாயிரம் உள்படச் செய்யுள் - 185.
- சர்வம் சிவமயம் -
வேதாந்த சூடாமணி முற்றுப் பெற்றது
This file was last updated on 15 Sept. 2010.
.